மாநில செய்திகள்

வார்தா புயலில் மரணமடைந்த 9 மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + "||" + The high court ordered the Tamil Nadu government

வார்தா புயலில் மரணமடைந்த 9 மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வார்தா புயலில் மரணமடைந்த 9 மீனவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வார்தா புயலில் பலியான 9 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை 2 வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை, 

வார்தா புயலில் பலியான 9 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீட்டை 2 வாரத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

என் தந்தை ரவிச்செல்வன் மீன்பிடி படகு டிரைவராக பணி செய்துவந்தார். 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயல் வீசியபோது, என் தந்தை உள்பட 9 பேர் கடலுக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புயலில் சிக்கி படகுடன் 9 பேரும் காணாமல்போயினர். இதுகுறித்து சென்னை மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

என் தந்தை ரவிச்செல்வன், மீனவர்கள் நிர்மல்ராஜ், வினோத் ஆகியோரது உடல் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையில் ஒதுங்கியது. மற்ற 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அரசு அறிவித்து, 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கியது.

இதற்கிடையில், வார்தா புயலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய செயலாளர் அறிவித்தார். இதையடுத்து இந்த இழப்பீடு தொகையை கேட்டு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். இதுவரை அரசு பரிசீலிக்காமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும், இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, வார்தா புயலில் பலியான என் தந்தை உள்பட 9 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. இதை பின்பற்றி தொகையை வழங்க காலஅவகாசம் வேண்டும். அதனால் 4 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் விஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வார்தா புயலில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து 2 வாரத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.