குறைவாக வரி வசூலித்ததால் தமிழக அரசுக்கு ரூ.6,471 கோடி இழப்பு இந்திய தணிக்கைத் துறை அதிர்ச்சி தகவல்

குறைவாக வரி வசூலித்ததால் தமிழக அரசுக்கு ரூ.6,471 கோடி இழப்பு இந்திய தணிக்கைத் துறை அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 9 July 2018 11:00 PM GMT (Updated: 9 July 2018 7:23 PM GMT)

தமிழகத்தில் 2016–17–ம் ஆண்டுக்கான வணிகவரி, மாநில ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரி, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள், மின்சார வரி, சுரங்கம் மற்றும் கனிமங்கள், நில வருவாய் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று வைக்கப்பட்ட இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழகத்தில் 2016–17–ம் ஆண்டுக்கான வணிகவரி, மாநில ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரி, முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்கள், மின்சார வரி, சுரங்கம் மற்றும் கனிமங்கள், நில வருவாய் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

அதில் 4 ஆயிரத்து 560 இனங்களில் ரூ.6,470.97 கோடி அளவுக்கு குறைவான மதிப்பீடுகள், குறைவாக வரி விதித்தல், வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. பெட்ரோல் மற்றும் டீசலின் இரண்டாம் முனை விற்பனை மீது வரி விதிப்புக்கு வழிவகை இல்லை. வணிகர்களின் சேவைக்கட்டணம் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. அதற்கான வழிவகையை கொண்டு வந்திருந்தால் கூடுதல் வருவாயாக ரூ.645.35 கோடி ஈட்டப்பட்டு இருக்கும்.

பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மீது குறைக்கப்பட்ட வரி விகிதம் அனுமதிக்கப்பட்டதால் ரூ.1,247.57 கோடி வரி குறைவாக விதிக்கப்பட்டது. பாதுகாப்பு வைப்பகம் மூலம் வழங்கப்பட்ட உறுதிமுறிகள் குறித்த முத்திரைத் தீர்வையை வசூலிக்கத் தவறியதால், ரூ.359.69 கோடி குறைவாக தீர்வை வசூலிக்கப்பட்டது.

சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான வழக்குகள் முடிந்த பின்னரும் வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் ரூ.24.23 கோடி அளவுக்கான நிலுவைத் தொகை வசூலிக்கப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story