கிறிஸ்டி பிரைடு நிறுவனங்களில் வருமான வரி சோதனை நிறைவு: ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது


கிறிஸ்டி பிரைடு நிறுவனங்களில் வருமான வரி சோதனை நிறைவு: ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 9 July 2018 8:53 PM GMT)

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது.

சென்னை, 

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்தது. 5 நாட்கள் நடந்த இந்த சோதனையில் ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டைகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சத்துமாவு, பருப்பு போன்றவற்றை வினியோகம் செய்யும் கிறிஸ்டி பிரைடு நிறுவனம், அக்னி குழும நிறுவனங்கள் உள்பட 4 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. குறிப்பாக ரூ.1,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 5-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சென்னை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், கோவை, ஈரோடு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை உள்பட அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவியின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவன தணிக்கையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதற்கிடையே சோதனையின்போது தற்கொலைக்கு முயற்சி செய்த நிறுவன காசாளர் கார்த்திகேயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது வீட்டில் உள்ள ஆழ்துளைகிணறு குழாயில் இருந்து சில பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி கணக்கில் வராத ரூ.4 கோடியும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் ரூ.6 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அத்துடன் கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் வாங்கப்பட்டுள்ள சொத்துகள் பற்றிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக வருமான வரி அதிகாரிகள் நடத்திவந்த சோதனை நேற்று மாலை நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

5 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.17 கோடி, 10 கிலோ தங்கம், ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் வரவு-செலவு ஆவணங்களும், இதர நிறுவனங்களின் தொழில்சார்ந்த விவர ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும் 100 பென்டிரைவ்கள், ஒரு லேப்-டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுதவிர மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சொத்துகள் முதலீடு செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

2016-ம் ஆண்டு 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அந்த சமயத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவன ஊழியர்கள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.300 கோடி அளவில் ‘டெபாசிட்’ செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. நிறுவன ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.240 கோடிக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து இருக்கின்றனர்.

கிறிஸ்டி பிரைடு நிறுவன உரிமையாளர் குமாரசாமியை கோவையில் ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குமாரசாமியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து விவரங்கள் திரட்டும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப்பணி ஓரிரு நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. அதனைத்தொடர்ந்து வருமான வரி சோதனையின் முழுவிவர அறிக்கை தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Next Story