2015-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம் தமிழக அரசு மீது இந்திய கணக்காய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு


2015-ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரியால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம் தமிழக அரசு மீது இந்திய கணக்காய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 July 2018 10:00 PM GMT (Updated: 2018-07-10T03:25:07+05:30)

2015-ம் ஆண்டில் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம் என்று தமிழக அரசு மீது இந்திய கணக்காய்வு அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை (2016-ம் ஆண்டு மார்ச் வரை) நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2015-ம் ஆண்டில் சென்னை, புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 289 பேர் பலியானதோடு, 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு சென்னை பல நாட்கள் முடங்கியது.

கட்டுப்பாடு இல்லாத வகையில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளால் வெள்ள நீரின் எளிதான ஓட்டம் தடைபட்டு, சென்னையை மூழ்கடித்தது.

மழைநீர் வடிகாலுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாதாள சாக்கடைத் திட்டங்கள் பல பகுதியில் இல்லை. எனவே மழைநீர் வடிகால் அமைப்பில் கழிவுநீர் கலந்து அதை அடைத்துக்கொள்வது சாதாரண நிகழ்வாக இருந்தது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) இரண்டாவது பெருந்திட்டத்தின் மூலம், நீர்வழிகளை ஒட்டியுள்ள கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக வெள்ளத் தாழ் நிலங்களை வரையறை செய்ய முயலவில்லை. இதனால் ஆற்றின் கரைகளில் பெரும் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன.

வேளாண், நகர்ப்புறம் அல்லாத மற்றும் திறந்தவெளி பொழுதுபோக்கு மண்டலங்களில் இருந்து நில பயன்பாட்டை பிற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் கட்டுமானங்களை சி.எம்.டி.ஏ. தாராளமாக அனுமதித்தது. அதுபோன்ற அனுமதியற்ற கட்டுமானங்களும் நீர்நிலைகளைச் சுருக்கி, 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பெருமளவு நீர் தேங்க வழிவகுத்துவிட்டது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேல்மடையில் இரண்டு புதிய நீர்த் தேக்கங்களை அரசு உருவாக்கவில்லை. கொசஸ்தலை ஆற்றுக்கு குறுக்கே கூடுதல் நீர் சேமிப்புப் பணி சரியாக திட்டமிடப்படவில்லை. இவற்றால் நீர் சேகரிப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு நிறைவேறவில்லை.

ஏரிகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக 2007-ம் ஆண்டில் சட்டம் இயற்றிய போதிலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் ஏரிகளின் சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வந்தது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணியை தொடங்கவில்லை. மழைகாலத்துக்கு முன்பே நிதியை ஒதுக்க அரசு அக்கறை கொள்ளவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரி மிகப் பெரிய ஒன்று. அதன் நீர்த்தேக்கம், நீர்வரத்து பற்றிய அறிவியல் பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும், வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பு அமைப்பும் இருக்கவில்லை. இது மத்திய நீர் ஆணையத்தின் விதிகளுக்கு முரணானது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அவசரகால செயல் திட்டம் இல்லாத நிலையில், நீர்த் தேக்கத்தில் இருந்து வெளியேறிய நீரின் அளவு, வரும் நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அடையாறில் விடப்பட்ட நீரின் அளவு வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஏரியின் நீர், முழு கொள்ளளவு மட்டத்துக்கு வைக்கப்படவில்லை.

செம்பரம்பாக்கம் கரையை ஒட்டிய பகுதியில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க நீர் ஆதாரத் துறை விரும்பியதால் மொத்த கொள்ளளவான 3.645 டி.எம்.சி.க்கு பதிலாக 3.481 டி.எம்.சி. நீர் மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டது.

கூடுதலாக 0.268 டி.எம்.சி. நீரை சேமிக்கும் வாய்ப்பு இருந்ததை பார்க்கும்போது, நீர் வெளியேற்றத்தை 6 மணிநேரத்துக்கு 12 ஆயிரம் கன அடி என்ற அளவில் வைத்திருக்க முடியும். ஆனால் 20 ஆயிரத்து 960 கன அடி முதல் 29 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.

வெள்ள நீர் வெளியேற்றத்தை உயர்த்தாமல் இருந்திருந்தால் 0.266 டி.எம்.சி. கூடுதல் அளவு நீரை நீர்த் தேக்கத்தில் வைத்திருக்க முடியும். அப்போதுகூட, முழுக்கொள்ளளவை எட்டியிருக்காது. வெளியேறும் நீரின் அளவு, வரத்து நீரின் அளவைவிட அதிகமாக இருந்ததால், அந்த வெள்ள சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவே கருத முடியும்.

21 மணிநேரத்துக்கு நீர் வரத்தைவிட அதிகமாக 29 ஆயிரம் கன அடி என்ற வீதத்தில் நீரை வரைமுறையற்றபடி வெளியேற்றியதன் மூலம் மனிதனால் வெள்ளப் பேரழிவு உருவாகியது.

எனவே, நீர் நிலைகள் மீதான கட்டுமானத்தை குறைக்க, வெள்ள சமவெளி மண்டல பற்றிய சட்டத்தை இயற்றவேண்டும். நீர்நிலைப் பகுதியில் நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டிட அனுமதி வழங்கக்கூடாது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை. பேரிடர் மேலாண்மைக்கான ஒரு நிறுவன கட்டமைப்பை நிதி தன்னாட்சியுடன் அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் (பொது மற்றும் சமூகப்பிரிவு தணிக்கை) தேவிகா நாயர், கணக்காய்வு தலைவர் திருப்பதி வெங்கடசாமி ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிதிநிலை மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில், 2015-16-ல் ரூ.32 ஆயிரத்து 627 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 2016-17-ல் ரூ.56 ஆயிரத்து 170 கோடியாக அதிகரித்துள்ளது. இது 72.16 சதவீதம் உயர்வு ஆகும்.

சட்டப்படி உருவாக்கப்பட்ட கழகங்கள், அரசு நிறுவனங்கள், கூட்டு பங்கு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு ரூ.29 ஆயிரத்து 811 கோடி முதலீடு செய்திருந்தது. முதலீடுகளில் இருந்து அரசு பெற்ற சராசரி வருமானம், 2012-13-ல் 0.20 சதவீதமாக இருந்து, 2016-17-ல் 0.62 சதவீதமாக உயர்ந்த போதிலும், முதலீடுகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் மிக குறைவாக இருந்தது. 2015-16-ம் ஆண்டு முடிவில் தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 30 கோடியாக இருந்த நிலுவையில் உள்ள நிதி பொறுப்புகள் 2016-17-ம் ஆண்டு இறுதியில் ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தேவைக்கு அதிகமாக அளித்த மருந்துகளின் தேவை பட்டியல் மற்றும் கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தின் தோல்வியால் மருந்துகள் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு காலாவதியானதால் ரூ.16.17 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலைகளுக்கு செல்போன் ‘ஜாமர்’ (தடுப்பான்களை) கொள்முதல் செய்வதில் அளவு கடந்த காலதாமதத்தினால் ரூ.81.36 லட்சம் தவிர்த்திருக்கக்கூடிய கூடுதல் செலவு ஏற்பட்டது.

அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்னரே நிதி ஆதாரங்களை உறுதி செய்துகொள்ள சென்னை பல்கலைக்கழகம் தவறியதன் விளைவாக ஒப்பந்ததாரரின் தொகை செலுத்த இயலாததால், பணி நிறுத்தப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானத்தில் செலவிடப்பட்ட ரூ.22.79 கோடி பலனற்றதானது.

நாங்கள் தாக்கல் செய்த அறிக்கையை பொது கணக்கு குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மற்றும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும். அவர்கள் கேட்கும் ஆதாரங்களை நாங்கள் வழங்குவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story