தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.78 ஆயிரத்து 854 கோடி மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல்

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பு ரூ.78 ஆயிரத்து 854 கோடி என்று மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை தமிழகத்தில், மின்சார வாரியம், போக்குவரத்துக்கழகம் உள்பட 68 பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. ஆறு நிறுவனங்கள் செயல்படவில்லை.
இந்த பொதுத்துறை நிறுவனங்களில் பதிவான மொத்த விற்பனை வரவு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 850 கோடி ரூபாயாகும். இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி, இந்த நிறுவனங்களின் திறண்ட இழப்பு ரூ.78 ஆயிரத்து 854 கோடியாகும்.
இறுதி செய்யப்பட்ட கணக்குகளின்படி, செயல்படும் 68 பொதுத்துறை நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் ரூ.931 கோடி ஆதாயம் ஈட்டியுள்ளன. 25 நிறுவனங்கள் ரூ.9,366 கோடி இழப்பை அடைந்தன. மூன்று நிறுவனங்கள் நஷ்டத்தையும் அடையாமல், லாபத்தையும் ஈட்டாமல் உள்ளன.
லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (ரூ.129 கோடி), டைடல் பார்க் நிறுவனம் (ரூ.49.28 கோடி), ஐ.டி. விரைவு வழிச்சாலை நிறுவனம் (ரூ.33.39 கோடி), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (ரூ.30.97 கோடி), தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (ரூ.21.74 கோடி) ஆகியவை பெரும் பங்கு வகித்தன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நஷ்டத்தை மாநில அரசே முழுமையாக ஈடு செய்கிறது. நஷ்டத்தை அடைந்த பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் (ரூ.5,786 கோடி) மற்றும் மொத்தமுள்ள 8 போக்குவரத்துக்கழகங்களின் (ரூ.3 ஆயிரத்து 49 கோடி) பங்கு அதிகமாகும்.
செயல்படாத 6 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றை மூடிவிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆறு நிறுவனங்களையும் மூடுவதற்கு அரசு முடிவெடுக்க வேண்டும்.
வெள்ள மேலாண்மை பணிகளை செயல்படுத்துவதில் ஏற்பட்ட 10 ஆண்டு காலதாமதத்தால் பொதுமக்களுக்கு இன்னல் விளைவித்ததுடன் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துக்கு ரூ.28.15 கோடி அளவுக்கு தவிர்க்கக் கூடிய செலவு ஏற்பட்டது.
புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் ரூ.10.29 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை தவிர்த்திருக்க முடியும். அதிகப்படியாக ரூ.3.94 கோடி எரிபொருள் செலவும் ஏற்பட்டது.
2 ஆயிரத்து 20 பஸ்கள் கூண்டு கட்டப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவை வணிக பயன்பாட்டுக்கு 90 நாட்களுக்கு மேல் உட்படுத்தப்படாமல் இருந்ததால் நஷ்டம் ஏற்பட்டது.
பொதுவினியோக திட்டத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட கோதுமை, அம்மா உணவகம் என்ற மாநில அரசின் திட்டத்துக்காக உபயோகப்படுத்தப்பட்டது. இது, பொதுவினியோக திட்ட (கட்டுப்பாடு) ஆணையை மீறிய செயலாகும். இதனால் திட்டத்துக்கு வராத உரிதற்ற ஆதாயம் ரூ.5.97 கோடி ஈட்டப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் குத்தகை வாடகையை மாற்றி அமைப்பதில் ஏற்பட்ட அளவுக்கும் மீறிய காலதாமதத்தால் தனியார் வாடகைதாரருக்கு உரிதற்ற ரூ.10.17 கோடி ஆதாயம் கிடைத்தது.
அம்மா சிமெண்ட் திட்டத்துக்கு வழங்குவதாக தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்ட அளவு 33.07 லட்சம் டன் ஆகும். ஆனால் இதை உறுதி செய்யத் தவறிய காரணத்தினால் குறைந்த மற்றும் மத்திய வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த 88 ஆயிரத்து 187 பயனாளிகள், குறைந்த விலை சிமெண்டை வாங்கும் வாய்ப்பை இழந்தனர். இதனால் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்துக்கு ரூ.5.75 கோடி இழப்பு ஏற்பட்டது.
மேலும் ஒப்பந்த அளவில் சிமெண்ட் வழங்காத வழங்குனர் ஒருவரிடம் ஒப்பந்த மீறுதலுக்காக ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்க டான்செம் நிறுவனத்தால் இயலவில்லை. ஏனென்றால், ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை, வங்கி உத்தரவாதமும் பெறப்படவில்லை.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோ, நிலக்கரி இறக்குமதியில் மிகச் சிறந்த நடைமுறையை பின்பற்றவில்லை. மாறுபடும் விலைவீத முறையையும் பின்பற்றவில்லை. இதனால் ரூ.746 கோடி தேவையற்ற செலவு ஏற்பட்டது.
மேலும், வழங்குனர்கள் கூறப்பட்ட விஷயத்தின் உண்மைத்தன்மையை டான்ஜெட்கோ சரிபார்க்கவில்லை. எனவே வழங்குனர்களுக்கு கூடுதலாக ரூ.813 கோடியே 68 லட்சம் தரப்பட்டது.
நீர்நிலைகளின் சேமிப்புக் கொள்ளளவை அதிகரிப்பதிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் குறைபாடுகள் காணப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் சேமிப்புக் கொள்ளளவை உருவாக்க அரசு தவறிவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதில், நிலத்தை கையகப்படுத்தும் முன்பு பணியைத் தொடங்கியதால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. டெண்டரை முடிப்பதில் சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளரின் அவசரத் தன்மையால் இந்த நிலை ஏற்பட்டது.
அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்படவில்லை. அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மணலை அகற்றும் பணிகள் நடக்காததால், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, கடலுக்குள் வெள்ள நீர் செல்லாமல் ஊருக்குள் புகுந்துவிட்டது.
கூவம் ஆற்றின் சூழலியல் சீரமைப்பிலும் குறைபாடுகள் உள்ளன. கூவம் ஆற்றை ஒட்டிய குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்களை அப்புறப்படுத்துவதில் அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. சரியான திட்டமிடல் இல்லாததால், கூவம் ஆற்றின் மறுசீரமைப்புத் திட்டத்தில் மெதுவான முன்னேற்றமே இருந்தது.
தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம் 2007-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை தடுக்க உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.
நீர் ஆதாரத் துறையில் கட்டுப்பாட்டில் ஆயிரத்து 540 குளங்கள் வந்தாலும் அவற்றில் 551 குளங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன. 170 குளங்கள் மட்டுமே முழுமையான கொள்ளளவுக்கு மீட்கப்பட்டுள்ளன.
புயலின் தாக்கம் மற்றும் பிற பேரிடர்களுக்கு அடிக்கடி உட்படும் தமிழகம், அந்த பேரிடர்களை மேலாண்மை செய்வதற்காக மேலாண்மைச் சட்டத்தின் (2005) முறைமைகளை உருவாக்கத் தவறிவிட்டது. முதல்-அமைச்சர் தலைமையிலான பேரிடர் மேலாண்மைக்கான முதன்மை குழுமம், கொள்கைகளை வகுப்பதற்காக ஒருமுறை கூட கூடவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் வெள்ளம் வர வழிவகுத்த காரணங்களை சீர் செய்வதற்கு தமிழக அரசு முழு நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்றும் ஒரு பேரிடர் ஏற்படுவதை தடுக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story