மக்களிடம் கருத்து கேட்க அன்புமணி ராமதாசுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு


மக்களிடம் கருத்து கேட்க அன்புமணி ராமதாசுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 July 2018 11:44 PM GMT (Updated: 2018-07-11T05:14:27+05:30)

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்க அன்புமணி ராமதாசுக்கு அனுமதி அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து இந்த திட்டம் தொடர்பாக பாதிக்கப்படும் தர்மபுரி தொகுதி மக்களின் கருத்தைக்கேட்க அத்தொகுதி எம்.பி. என்ற முறையில் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.ராஜா, வக்கீல் கே.பாலு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “அன்புமணி ராமதாஸ் எம்.பி. என்ற முறையில் தனது தொகுதிக்குள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. எனவே அவர் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக எந்த தேதியில், எங்கெங்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்போகிறார் என்பது குறித்த விவரங்களுடன் புதிய மனுவை போலீசாரிடம் கொடுக்கவேண்டும். அதை பரிசீலித்து, நியாயமான நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் அன்புமணி ராமதாசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். 

Next Story