மாநில செய்திகள்

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? மருத்துவர் விளக்கம் + "||" + Jayalalithaa drinking juice video display true? The doctor explanation

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? மருத்துவர் விளக்கம்

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? மருத்துவர் விளக்கம்
ஆஸ்பத்திரியில் நைட்டி அணிந்தபடி ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா? என்பது குறித்து விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் விளக்கம் அளித்தார்.
சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால், மருத்துவர் சாந்தாராம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வங்கி கணக்கு வைத்திருந்த ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மகாலட்சுமி ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அவர்களிடம், சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது ஜெயஸ்ரீகோபால் கூறியதாவது:-

2015-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜெயலலிதாவுக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. இதற்கு, சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரிதா சிகிச்சை அளித்து வந்தார். சர்க்கரை நோயால் தான் ஜெயலலிதாவுக்கு சிறுநீரக பாதிப்பு வந்ததா? என்பதை கண்டறிவதற்காகவும், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் என்னை மருத்துவர் சரிதா அழைத்தார்.

அதன்படி நான், போயஸ் கார்டனுக்கு சென்று சிகிச்சை அளித்தேன். ஜெயலலிதாவுக்கு 15 ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையும் இருந்து வந்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெயலலிதா முறைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறினர்.

இதை ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன். ஆனால் அவர், ஆர்வம் காட்டவில்லை. உடல் பருமனை குறைப்பதற்கு பிரத்யேக அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்தினேன். அதையும் ஜெயலலிதா விரும்பவில்லை. உணவு கட்டுப்பாடு மூலமாக உடல் எடையை குறைக்க முயற்சிப்பதாக ஜெயலலிதா கூறினார்.

இவ்வாறு ஜெயஸ்ரீகோபால் கூறினார்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, 2016-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி ஜிலேபி, ரசகுல்லா, பாதுஷா போன்ற இனிப்பு வகைகள் சாப்பிட்டது குறித்து ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்றைய தினம் தேர்தல் கொண்டாட்டம் என்று கூறி ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டதாகவும், உரிய கட்டுப்பாடுடனே இனிப்பு எடுத்துக்கொண்டதாகவும் ஜெயஸ்ரீகோபால் கூறி உள்ளார்.

அன்றைய தினம் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் முடிவு வெளியானதால் அ.தி.மு.க. வெற்றியை கொண்டாட மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டதாக வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆணையம் தரப்பு வக்கீல் மதுரை எஸ்.பார்த்தசாரதி, ‘அன்றைய தேதியில் மட்டுமல்லாமல் அதன்பின்பு பல நாட்கள் ஜெயலலிதா இனிப்பு எடுத்துக்கொண்டதாகவும், திராட்சை, மாம்பழம், மலைவாழைப்பழம் போன்ற பழங்கள் எடுத்துக்கொண்டதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?’ என்று ஜெயஸ்ரீகோபாலிடம் கேள்வி எழுப்பினார். அதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணருக்கு தான் தெரியும் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

சிகிச்சையில் இருந்தபோது, ஜெயலலிதா இரட்டை ஜடை போட்டு, நைட்டி அணிந்தபடி ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ காட்சி வெளியானது குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயஸ்ரீகோபால், ‘அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. அதேவேளையில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது இரட்டை ஜடை- நைட்டி அணிந்தபடி தான் இருந்தார். அவருக்கு நான் சிகிச்சை அளித்ததால், எனக்கு அது தெரியும். பத்திரிகையில் வெளியான புகைப்படமும் அதுபோலவே இருந்தது’ என்று பதில் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சிறுநீரக பிரச்சினை இருந்தது சம்பந்தமாகவோ, அதற்கு சிகிச்சை பெற்று கொண்டதாகவோ இதுவரை யாரும் ஆணையத்தில் வாக்குமூலம் அளிக்கவில்லை. ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரான சிவக்குமாரும் இதுகுறித்து எந்த தகவலையும் ஆணையத்தில் தெரிவிக்கவில்லை.

தற்போது தான் ஜெயஸ்ரீகோபால், ஜெயலலிதாவுக்கு சிறுநீரக பிரச்சினை இருந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

மருத்துவர் சாந்தாராம், ‘கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக சிகிச்சை அளித்தேன். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவருக்கு சர்க்கரை அளவை பரிசோதித்து உரிய சிகிச்சை அளித்தேன். ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு மருந்து, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா? என்று சசிகலா என்னிடம் அவ்வப்போது கேட்பார்’ என்று குறுக்கு விசாரணையின் போது பதில் அளித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாளுக்கு சசிகலாவும், சசிகலா பிறந்த நாளுக்கு ஜெயலலிதாவும் சொகுசு கார் பரிசாக வழங்கி உள்ளனர். இதற்கு அவர்கள் இருவருமே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றுள்ளனர். அதேபோன்று சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் இதே வங்கியில் கல்விக்கடன் பெற்றுள்ளார்.

இந்த கடன் தொடர்பாகவும், ஜெயலலிதா, சசிகலா வங்கிக்கணக்கு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வங்கி மேலாளராக பணியாற்றிய மகாலட்சுமி பதில் அளித்துள்ளார். 2012-ம் ஆண்டுக்கு பின்பு வங்கி பரிவர்த்தனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கடைசியாக ஜெயலலிதா வங்கி கணக்கில் 9 ஆயிரம் ரூபாயும், சசிகலா வங்கி கணக்கில் ரூ.3 லட்சமும் இருந்ததாக அவர் கூறி உள்ளார்.