தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? தங்க தமிழ்செல்வன் விளக்கம்


தகுதி நீக்க வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? தங்க தமிழ்செல்வன் விளக்கம்
x
தினத்தந்தி 11 July 2018 12:35 AM GMT (Updated: 11 July 2018 12:35 AM GMT)

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஏன் வாபஸ் பெறவில்லை? என்பதற்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டசபை சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதில், சபாநாயகரின் உத்தரவை சரி என்று தலைமை நீதிபதியும், தவறு என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறியிருந்தனர்.

இதையடுத்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், வழக்கில் ஒரு மனுதாரருமான தங்க தமிழ்செல்வன், தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து, ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்தார்.

இதையடுத்து அவர் மீது, ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பெண் வக்கீல் ஸ்ரீமதி என்பவர் தாக்கல் செய்தார். இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்து தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இந்த வழக்கை பரிசீலித்துவிட்டு, தங்க தமிழ்செல்வனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, தங்க தமிழ்செல்வன் நேற்று மாலையில் வக்கீல்கள் தமிழ்மணி, டி.மோகன் ஆகியோருடன் ஆஜரானார். அப்போது தலைமை நீதிபதி குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு, நிபந்தனையற்ற மன்னிப்பை அவர் கோரினார்.

இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல், நிபந்தனையற்ற மன்னிப்பை எல்லாம் ஐகோர்ட்டில் தான் கேட்கவேண்டும் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கோர்ட்டு அவமதிப்பு புகாருக்கு விளக்கம் அளிக்க தங்க தமிழ்செல்வன் தரப்பில் 6 வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியில் வந்த தங்க தமிழ்செல்வன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார். அதன்படி இன்று (நேற்று) ஆஜரானேன். பின்னர் இந்த வழக்கிற்கு விளக்கம் அளிக்க காலஅவகாசம் கேட்டதால், ஆகஸ்டு 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி அட்வகேட் ஜெனரல் உத்தரவிட்டார்.

தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவேன் என்று முன்பு கூறினேன். தற்போது வழக்கை வாபஸ் பெறவேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த வழக்கை தற்போது விசாரிக்கும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் மீது நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு விரைவாக முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், வழக்கை வாபஸ் பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story