மாநில செய்திகள்

மதுரை-சென்னை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும் + "||" + The Air India flight between Madurai-Chennai-Mumbai will start 20 days later

மதுரை-சென்னை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்

மதுரை-சென்னை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு தொடங்கும்
தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை,

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 42 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவையை நடத்தி வருகிறது. 80 சதவீதம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான சேவை, எவ்வித காரணமும் அறிவிக்கப்படாமல் 12-ந் தேதி(நாளை) முதல் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்தது.


அதைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருவதையும், ரூ.1,500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மற்றும் ராமேசுவர சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, அதன் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் இயக்குனர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தனித்தனியாக கடிதம் எழுதி மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை நிறுத்தாமல் தொடர வலியுறுத்தினார்.

மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் தனது தனிச் செயலாளரிடம் நேரடியாக சென்று விமானத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிய அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஹஜ் புனித பயணம் நடைபெற்று வருவதால் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதின் பேரில் 20 நாட்களுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவை இயக்கப்படும் என்பதையும், விரைவில் மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்து உள்ளனர்.

இதனால் விமானம் மூலம் சுற்றுலா, வியாபார வர்த்தகம், மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போரின் பயணம் எந்த தடையுமின்றி 20 நாட்களுக்கு பிறகு தொடரும் என்றும், அதே போல பரிசீலனையில் உள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.