தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்


தமிழில் பரீட்சை எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 11 July 2018 12:55 AM GMT (Updated: 11 July 2018 12:55 AM GMT)

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியைத் தொடர்ந்து தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை,

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப் படையில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கடந்த மே மாதம் 6-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. சென்னை உள்பட நாடு முழுவதும் 136 நகரங்களில், தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர்.

பல்வேறு குளறுபடிகள், தேர்வு மைய சர்ச்சைகள், வழக்குகளுக்கு மத்தியில் நடந்த இந்த ‘நீட்’ தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் 4-ந்தேதி வெளியிடப்பட்டன.

தமிழ் வினாத்தாளில் ஆங்கில மொழி வார்த்தைகள் பலவும் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்ததாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் ஒரு பொது நல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள்:-

* சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பாடங்களில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டன. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிற நிலையில், அதன்கீழ் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.

* தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியலில் 10 கேள்விகளும், வேதியியலில் 6 கேள்விகளும், உயிரியலில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டு இருந்தன.

* தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் அல்லது பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்குதாரர் சார்பில் வாதிடும்போது, “ஆங்கில வினாத்தாளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில், ‘அரிசியின் ரகம்’ என்பதற்கு பதிலாக ‘அரிசியின் நகம்’ என்று தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மனித உடலில் நாளங்கள் என்பதற்கு பதிலாக ‘நலன்கள்’ என தவறாக உள்ளது. ‘வவ்வால்’ என்பதற்கு பதிலாக ‘அவ்வால்’ என உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கி மறு தரவரிசை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டது.

‘நீட்’ தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ. தரப்பில் பதில் அளித்து வாதிடும்போது, “மருத்துவ கவுன்சில் பரிந்துரையின்பேரில் மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து எடுத்துத்தான் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, “நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. வாரியம் தன்னிச்சையாக செயல்படுகிறது” என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் “பீகாரில் 35 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். ஆனால் கூடுதல் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முடிவு வெளியிட்டது எப்படி? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும் சமச்சீர் கல்வி பாடத்திட்டமும் வேறு வேறு. அவை இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?” என்று சி.பி.எஸ்.இ.க்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் உள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது, “மொழிமாற்றத்தில் தவறு நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் 2 வாரத்தில் புதிய தரவரிசைப்பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட வேண்டும்” என நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

மேலும், “தற்போதைய தரவரிசைப்பட்டியலையும், மருத்துவ கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தி மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

தீர்ப்பில் கூறி உள்ள பிற முக்கிய அம்சங்கள்:-

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட உடன் ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் வழக்கு தாக்கல் செய்த அன்றைய தினம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது நியாயமற்றது. மேலும் கோர்ட்டில் விசாரணையின்போது தமிழக மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் இப்போதைக்கு வெளியிடப்படாது என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவசரமாக ‘நீட்’ தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

‘நீட்’ தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு கோர்ட்டு கேட்டபோது, அதற்கு சி.பி.எஸ்.இ. மறுத்துவிட்டது. தேசிய அளவில் நடக்கும் தேர்வில் இதுபோன்ற போக்கு கடைப்பிடிக்கப்படுவதை ஏற்க முடியாது. ‘நீட்’ தேர்வு கேள்விகளில் உள்ள தவறை புரிந்து பதில் எழுதிய மாணவர்களை பாராட்ட வேண்டும். இதை மேம்போக்காக கருதாமல் மாணவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

நீட் தேர்வில் தனியார் மாணவர்கள் பங்கேற்க முடியாதநிலை உள்ளது.

ஏழை மாணவர்கள் பலர் பால் பாக்கெட்டு போட்டும், வீடு வீடாக பத்திரிகை விற்றும் பள்ளிக்கு செல்லாமல் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகிறார்கள். அவர்களை ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இந்த மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகத்தான் பள்ளிக்கு செல்லாமல் தனியாக படிக்கின்றனர். அப்படியிருப்பவர்களை ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று தடுக்க காரணம் என்ன?

இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும், அறிவியல் பாடங்களில் செய்முறை அறிவு பெற்று இருக்க வேண்டும் என்பதால் தனியார் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத தடுக்கப்படுகிறார்களா?

பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி பெறும் மதிப்பெண் மட்டும் முக்கியமல்ல, இதுபோல தனியாக படிக்கும் மாணவர்களை அரசும், கல்வி அமைப்புகளும் ஊக்கப்படுத்த வேண்டும். தனி மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.


Next Story