‘நீட்’ தேர்வு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனுதாக்கல் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேட்டி


‘நீட்’ தேர்வு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனுதாக்கல் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 2018-07-12T01:09:14+05:30)

‘நீட்’ தேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘கேவியட்’ மனுதாக்கல் செய்துள்ளோம் என டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.

சென்னை, 

‘நீட்’ தேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘கேவியட்’ மனுதாக்கல் செய்துள்ளோம் என டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு நிறைவு நாள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆகஸ்டு 9–ந் தேதி நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள், விவசாயிகள் நடத்த உள்ள சிறை நிரப்பும் போராட்டத்தையும், செப்டம்பர் 5–ந் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற உள்ள பேரணியையும் ஆதரிப்பது.

சேலம்– சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி ஆகஸ்டு 1–ந் தேதி ‘என் நிலம், என் உரிமை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்வது. சென்னையில் ‘கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு’ நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசு தற்போது மூர்க்கத்தனமான அரசாக மாறி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் அடக்குமுறையை ஏவி வருகின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் போன்ற சூழல் உருவாகி உள்ளது.

‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஏற்கனவே அதிக மதிப்பெண் அடிப்படையில் நிரப்பி உள்ள மாணவர்களை தொந்தரவு செய்யாமல், கூடுதலான மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்து அதில் இந்த மாணவர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறுகையில், ‘நீட்’ தேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் செங்கோட்டையன் ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று இருப்பது நல்ல வி‌ஷயம். அப்படியே மத்திய அரசை தொடர்பு கொண்டு சி.பி.எஸ்.ஐ. மேல்முறையீடு செய்யாமல் தடுக்க வேண்டும். 24 ஆயிரம் மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கூடுதலாக இடம் ஒதுக்கி அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர்க்கும் போது, அரசு கட்டணத்துக்கு அதிகமான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. செலுத்த வேண்டும் என்றார்.

Next Story