மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 July 2018 10:30 PM GMT (Updated: 2018-07-12T01:21:42+05:30)

மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது.

சென்னை, 

மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது.

சென்னை, திருமுல்லைவாயலில் புதிதாக மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.

மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஏன் மதிய உணவுக்கு முன்பே திறக்கின்றனர்?, அந்த கடைகளில் வேலை நேரத்தை குறைத்தால் என்ன?, டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களில் தரமான உணவு விற்கப்படுகிறதா?, அந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய உரிமங்களை பெற்றுள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், சென்னையில் உள்ள டாஸ்மாக் பார்களில் 205 பார்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெறாத பார்கள் 7 நாட்களுக்குள் உரிமத்தை பெறவேண்டும். இல்லையென்றால், அந்த பார்களின் இழுத்து மூடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், எங்கள் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு உரிமத்தை வாங்கிவிட்டனர். தரமான உணவு பண்டங்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், குடிபோதையில் சாப்பிடும் உணவு தரமானதா? என்பது குடிமகன்களுக்கு தெரியாது. அவர்கள் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு நல்ல உணவு பண்டங்கள் தரமாக வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக அக்கறை எங்களுக்கு உள்ளது. எனவே, பார்களில் தரமான உணவு பண்டங்கள் விற்கப்பட வேண்டும். தரம் குறைவாக இருந்தால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்னர், டாஸ்மாக் மதுபான கடையின் வேலை நேரத்தை ஏன் இதுவரை அரசு குறைக்கவில்லை. 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடை திறந்துள்ளது. ஏன் உணவு இடைவேளைக்கு முன்பு மதுக்கடையை திறக்கிறீர்கள்?, பிற்பகல் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? என்று அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அரவிந்த்பாண்டியன், டாஸ்மாக் மதுபான கடையை எப்போது திறப்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றார். அதற்கு நீதிபதிகள், மதியம் உணவுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடையை திறந்து மக்களை குடிக்க வைப்பதில் என்ன கொள்கை முடிவு தமிழக அரசுக்கு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, படிப்படியாக மதுபான கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அரவிந்த்பாண்டியன், நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் திறக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், தமிழகத்தில் 500–க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதை நாங்கள் கணக்கு காட்ட விரும்பவில்லை. இருந்தாலும், இந்த 500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story