டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 8:05 PM GMT)

பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் டேங்கர் லாரி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

 இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30–ந் தேதியுடன் முடிவடைவதால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.

அதில் வங்கி உத்தரவாத தொகையை குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 9–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்துஸ்தான் பெட்ரோலிய கழகத்தின் துணை பொதுமேலாளர் நாராயணராவ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா நேற்று விசாரித்தார். அப்போது புதிய ஒப்பந்த விதிமுறைகள் எந்த விதத்திலும் தற்போதுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story