புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 11 July 2018 9:24 PM GMT (Updated: 11 July 2018 9:24 PM GMT)

புதிய பாடத்திட்டம் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, அருணகிரிசத்திரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பில் ஆய்வகம், நூலகம், சாய்வுதளத்துடன் கூடிய அடுக்குமாடி பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடுக்குமாடி பள்ளி கட்டிடத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் காரணமாக தொழிற்சாலைகளுக்கும், பள்ளிகளுக்கும், பல்வேறு துறையினருக்கும் தணிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ‘ஆடிட்டிங்’ (பட்டய கணக்கு) பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்ததிட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இனிவரும் காலங்களில் புதிய பாடத்திட்டங்கள் செல்போன் மூலம் ‘டவுன்லோடு’ செய்து படிக்கலாம். புதிய பாடத்திட்டங்கள் குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு 5 கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்மொழியில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவித்துள்ளது. இதனால் தமிழ்மொழியில் தேர்வு எழுதிய பலரும் டாக்டராக வாய்ப்புள்ளது.

அடுத்த கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளாகும். மாணவர்கள் பொதுத் தேர்வுக்கும், தனித்தேர்வுகளுக்கும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story