மாநில செய்திகள்

மோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு + "||" + The Palani Murugan Temple is an idol of fifth Submit the Court

மோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

மோசடி புகார் எதிரொலி: பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு
மோசடி புகார் எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இருந்து ஐம்பொன் சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்குள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டதாகும். தினமும் அபிஷேகம் செய்வதால், இந்த சிலை சேதம் அடைவதாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு 6 மாத காலத்தில் அந்த சிலை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஐம்பொன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, சென்னை அறநிலையத்துறை சென்னை தலைமையிட நகைமதிப்பீட்டு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த மோசடி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடியும்வரை கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலையை பெற்று பாதுகாப்பாக வைக்கும்படி, கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி சிலையை கோர்ட்டுக்கு எடுத்து செல்ல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பழனிக்கு வந்தனர். பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் சென்னை சென்றிருந்ததால் சிலையை போலீசாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் சிலையின் சக்தியை இழக்க வைக்க பூஜைகளும் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிலையின் சக்தியை இழக்க வைக்கும் பூஜை மற்றும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில், கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மலைக்கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் ஐம்பொன் சிலையை, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டியில் வைத்துக்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சிலையின் எடை, உயரம் உள்ளிட்டவைகளை கோவில் அதிகாரிகள் அளவீடு செய்து விவரங்களை ஆவணங்களாக பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டியை, மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்துக்கு கோவில் அதிகாரிகள் கொண்டுவந்தனர். அதன் பின்பு கோவிலுக்கு சொந்தமான வாகனம் மூலம் ஐம்பொன் சிலை வைக்கப்பட்ட பெட்டி, இடும்பன் கோவில் பை-பாஸ் சாலை வழியாக பாலாறு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு ஐம்பொன் சிலை வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து சிலையின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சிலையின் எடை 221 கிலோ 100 கிராமும், உயரம் 3¾ அடி (111.5 சென்டி மீட்டர்) இருப்பதும் தெரியவந்தது.

இந்த விவரங்களை சிலையை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதன்பிறகு சிலை வைக்கப்பட்ட பெட்டியை, வேனில் ஏற்றி கும்பகோணத்துக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். பின்னர் அந்த சிலை கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்பு ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி முன்பு சிலையை மரப்பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்து சிலையை எடை போட்டனர். அந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலை பாதுகாப்பு மையத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலை மீது எந்தவித குறிப்பும் எழுதக்கூடாது என்று அங்கு உள்ளவர்களிடம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டார்.