தொழில் முதலீடு பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை


தொழில் முதலீடு பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 11 July 2018 9:45 PM GMT (Updated: 11 July 2018 9:34 PM GMT)

தொழில் முதலீடுகள் பின்னடைவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. தொழில் துறை முதலீடுகளை ஈர்த்து புதிய நிறுவனங்களை தொடங்கினால் மட்டுமே தமிழகம் முன்னேற முடியும் என்ற நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த புள்ளி விவரம் காட்டுகிறது. தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளிக்கிறது.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான் தமிழகத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இது தான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால், தொழில் தொடங்க அனுமதிப்பதற்காக கையூட்டு வாங்குவதை இந்த ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால் தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர் கள் கூட ஆட்சியாளர்களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர்.

தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. இந்த ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப்போவதில்லை. எனினும், வெகுவிரைவில் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும், அதன்பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பது மட்டும் உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story