பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு


பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2018 7:04 AM GMT (Updated: 12 July 2018 7:04 AM GMT)

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #NirmalaDevi

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ பதிவு சமூகவலைதளங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னரே போலீசார் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத்தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.

நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கூடுதலாக எந்த தகவலையும் சொல்லவில்லை என்றும், செல்போனில் பேசும்போது கூறிய உயர் அதிகாரிகள் யார்? என சொல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரித்தும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார்? என்ற முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே உள்ளது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பொறுத்தமட்டில் இதுவரை அவர்கள் நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில் கைதான 3 பேர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டது.

மேலும் வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டது.

Next Story