எல்லா கட்சிகளும் ஆசைப்படலாம் ஆட்சி செய்ய வேண்டியது யார்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் டி.டி.வி.தினகரன்


எல்லா கட்சிகளும் ஆசைப்படலாம் ஆட்சி செய்ய வேண்டியது யார்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 12 July 2018 9:15 PM GMT (Updated: 12 July 2018 8:10 PM GMT)

எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் ஆட்சி செய்ய வேண்டியது யார்? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

ஆலந்தூர், 

எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் ஆட்சி செய்ய வேண்டியது யார்? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அணுகுண்டாக மாறும்

சத்துணவு திட்டத்தில் முட்டை வாங்கியதில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு இது உதாரணமாக உள்ளது. இந்த முட்டை, விரைவில் அணுகுண்டாக மாறும். சத்துணவு துறைக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருந்து உள்ளது.

தற்போது முட்டை வெளிவந்து உள்ளது. விரைவில் எல்லா முறைகேடுகளும் வெளியே வரும். இது அரசாங்கமா? அல்லது சொந்த நிறுவனமாக நடத்தினார்களா? என்பது விரைவில் உண்மைகள் வெளியே வரும்.

அடுத்த கட்ட நடவடிக்கை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்ததும், இந்த ஆட்சி தானாக முடிவுக்கு வந்துவிடும். பின்னர் நாங்கள், ஆட்சிக்கு வந்ததும் பல உண்மைகளை வெளியே கொண்டு வருவோம்.

பொன் மாணிக்கவேல் திறமையான அதிகாரி. நீதிமன்றம் அவருக்கு சுதந்திரம் கொடுத்து உள்ளதால் சிலை கடத்தல் வழக்கில் இன்னும் யாரெல்லாம் சிக்க உள்ளார்கள்? என்பது தெரிய வரும். இரட்டை இலை சின்னம் வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை விசாரணைக்காக நீதிபதி அழைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி அழைக்கவில்லை என்றால் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம்.

மக்கள் முடிவு செய்வார்கள்

எல்லா கட்சிகளும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

மழைக்காலம் தொடங்க உள்ளதால் முன்கூட்டியே கால்வாய்களை தூர்வாரி இருக்க வேண்டும். இந்த அரசு வந்த வரை லாபம் என்ற அக்கறையில் உள்ளது.

8 வழிச்சாலையை கண்டித்து அரூரில் போராட்டம் நடத்தப்படும்.

பிப்ரவரி 25-ந் தேதி முதல்-அமைச்சர் கடிதம் எழுதியதும் மறுநாளே அனுமதி வழங்கப்பட்டதால் மக்கள் சந்தேகப்படுகின்றனர். இந்த சாலையால் மக்களுக்கு நன்மை ஏற்பட போவது என்றால் மக்களிடம் பேசி செய்ய வேண்டியது தானே.

இந்த ஆட்சி சென்றபின் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறுத்தப்படும். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு, 37 இடங்களை கைப்பற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story