மாநில செய்திகள்

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண் கைது + "||" + The girl who bought gun was arrested

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண் கைது

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கிய பெண் கைது
மகனை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்க கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக ரூ.2 லட்சம் கொடுத்து துப்பாக்கி வாங்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை, 

மகனை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்க கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக ரூ.2 லட்சம் கொடுத்து துப்பாக்கி வாங்கிய பெண் கைது செய்யப்பட்டார். சொத்து தகராறில் கணவரையும் கொல்ல திட்டமிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). காண்டிராக்டர். இவரது மனைவி மஞ்சுளா (36). இவர்களின் மகன் ரித்தேஷ்சாய் (10). சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குமாஸ்தாவாக மஞ்சுளா வேலை செய்து வந்தார். கார்த்திகேயனும், மஞ்சுளாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

இதனிடையே தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற வாலிபருடன் மஞ்சுளாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கார்த்திகேயன், நாகராஜை கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் கொண்ட நாகராஜ் பிப்ரவரி 28-ந் தேதி சிறுவன் ரித்தேஷ்சாயை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கில் நாகராஜை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைது செய்தனர்.

அப்போது தனது மனைவி மஞ்சுளா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் கொலையில் சம்பந்தப்படவில்லை என்று மஞ்சுளா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ரித்தேஷ்சாய் கொலைக்கு பிறகு மஞ்சுளாவை விட்டு கார்த்திகேயன் பிரிந்தார். இதனால் சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் மஞ்சுளா தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் மஞ்சுளா நேற்றுமுன்தினம் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் சில வெளிநாட்டு பொருட்கள் வேண்டும் என்று கூறி தனக்கு தெரிந்த சி.ஐ.டி. நகரை சேர்ந்த பிரசாந்த் (24), பள்ளிக்கரணையை சேர்ந்த சுதாகர் என்ற சுரேஷ் (31) ஆகியோரிடம் ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் பொருட்களை வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டார். பிரசாந்த், சுரேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

விசாரணையில், மஞ்சுளா வெளிநாட்டு பொருட்களை வாங்கி தரும்படி கேட்கவில்லை. ரூ.2 லட்சம் கொடுத்து கள்ளத்துப்பாக்கி வாங்கி தருமாறு கேட்டார். அது கிடைக்காததால் சாதாரண ஏர்பிஸ்டல் ரக பொம்மை துப்பாக்கியை வாங்கி கொடுத்தோம். இதனால் அவர் பொய் புகார் கொடுத்துள்ளார் என்று பிரசாந்தும், சுரேசும் கூறினர்.

இதையடுத்து மஞ்சுளாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணையில் துப்பாக்கி வாங்கியது ஏன்? என்பது குறித்து மஞ்சுளா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

எனது மகன் கொலை செய்யப்பட்ட பிறகு, எனது வாழ்க்கை தடம் மாறிவிட்டது. எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். என்னிடம் அவர் விவாகரத்து கேட்டார். விவாகரத்து கொடுக்க நான் சம்மதிக்கவில்லை. எனது பெயரில் ஏராளமான சொத்துகளை என் கணவர் வாங்கி இருந்தார். அந்த சொத்துகளை எல்லாம் அவரது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படி, எனது கணவர் என்னை மிரட்டினார்.

இன்னொரு பக்கம் எனது மகனை கொடூரமாக கொலை செய்த நாகராஜ், ஜாமீனில் வெளியே வரப்போவதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே நாகராஜை பழிக்குப்பழி வாங்க எனது மனசு துடித்தது. சிறைக்கு சென்று நாகராஜை நான் பார்க்காததால் என்மீது அவர் கோபத்தில் இருப்பதாக எனக்கு தெரியவந்தது. ஜாமீனில் வெளியே வந்தபிறகு நாகராஜால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயமும் இருந்தது.

நாகராஜை பழிக்குப்பழியாக கொல்லவும், என்னை மிரட்டி வந்த எனது கணவரை கொலை செய்யவும் நான் கள்ளத்துப்பாக்கி வாங்கி தரும்படி, பிரசாந்திடம் கேட்டேன். அவர் தனது நண்பர் சுரேஷ் மூலம் துப்பாக்கி வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டார். நான் முதல் தவணையாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் உண்மையான துப்பாக்கி வாங்கி தராமல், சாதாரண ஏர்பிஸ்டல் ரக துப்பாக்கியை வாங்கி கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது பொய்யான புகார் கொடுத்தேன்.

இவ்வாறு மஞ்சுளா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மஞ்சுளா, பிரசாந்த், சுரேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.