மாநில செய்திகள்

மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவினால் கண்டுபிடிக்க மீன்வள பல்கலைக்கழக மையங்களில் இலவச பயிற்சி அமைச்சர் ஜெயக்குமார் தகவல் + "||" + Free Training at Fisheries University Centers   Minister Jayakumar informed

மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவினால் கண்டுபிடிக்க மீன்வள பல்கலைக்கழக மையங்களில் இலவச பயிற்சி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவினால் கண்டுபிடிக்க மீன்வள பல்கலைக்கழக மையங்களில் இலவச பயிற்சி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிவதற்கு மீன்வள பல்கலைக்கழக மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை, 

தமிழ்நாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களில், பிரேதங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிற ‘பார்மலின்’ ரசாயனம் தடவப்பட்டு இருப்பதாகவும், இந்த மீன்களை சமைத்து சாப்பிடுகிறபோது, அது புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனைகளையும் நடத்தினர்.

இந்த நிலையில், மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவி இருந்தால் அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம் என தெரியவந்து உள்ளது.

இதுபற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ‘பார்மலின்’ என்னும் ரசாயனம் தடவப்பட்டு வருவதாக வீண் வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றை யாரும் நம்பி அச்சம் அடைய தேவையில்லை. ஒருவேளை அப்படி சந்தேகம் இருந்தால் அதை எளிமையான வழியில் நாம் சோதித்து தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.

இதற்காக ஒரு சிறிய கருவி உள்ளது. அந்த கருவியில் 2 பரிசோதனை குழாய்கள் இருக்கும். இதில் ஒரு குழாயில் சந்தேகப்படும் மீன் தசை பகுதியில் ஒரு 2 கிராம் அளவில் எடுத்துப்போட வேண்டும். அந்த குழாயில் கரைப்பான் திரவத்தை (சால்வண்ட்) ஊற்றி, 2 நிமிடம் நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு பரிசோதனை குழாயில் ‘ரியாக்டிங் சொல்யூசன்’ எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குழாயில் ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் கலவையை சேர்க்க வேண்டும்.

இந்த பரிசோதனையில் சுமார் 2 நிமிடத்துக்குள் அந்தக்கலவை கொஞ்சம் கொஞ்சமாக பசுமை மஞ்சள் (கிரீனிஷ் யெல்லோ) நிறத்துக்கு மாறினால், அந்த மீனில் ‘பார்மலின்’ ரசாயனம் தடவப்பட்டு உள்ளதை உறுதி செய்துவிடலாம். நிறத்தின் அடர்த்திக்கேற்ப ரசாயனத்தின் அளவை யூகிக்கலாம். ஆனால் எந்தவித நிற மாற்றமும் ஏற்படவில்லை என்றால், அந்த மீனில் எந்த ரசாயனமும் தடவப்படவில்லை என்று அர்த்தம்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் நாகப்பட்டினம், தூத்துக்குடி, மாதவரம் மையங்கள் மற்றும் சென்னையை அடுத்த வாணியஞ்சாவடி முதுநிலை மீன்சார் படிப்புக்கான கல்வி மையத்திலும் இந்த ஆய்வு கருவி கிடைக்கிறது. இதன் விலை ரூ.3 ஆயிரம்தான்.

மேலும் மேற்கண்ட மையங்களில் இதற்கான இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் மீனவர்கள், மீன்வள நலச்சங்கங்களை சேர்ந்தவர்கள், மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தன்னார்வலர்களும் சேர்ந்து பயன் அடையலாம்.

மீன் வியாபாரிகளும் தங்களிடம் விற்பனைக்கு வரும் மீன்கள் நல்ல மீன்கள் தானா என்பதை உறுதிசெய்ய இந்த பரிசோதனை கருவிகளை வாங்கி பயனடையலாம். பொதுமக்களுக்கும் இதை தெரியப்படுத்தி சந்தேகத்தை தெளிவுபடுத்தலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை கடலில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனை ஆகிவிடுகின்றன. எனவே ரசாயனம் தடவ தேவை கிடையாது. எனவே யாரும் அச்சமோ, பீதியோ அடைய தேவையில்லை. உடலுக்கு ஆரோக்கியமான மீனை வாங்கி சமைத்து சாப்பிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.