போராடமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்ததால் இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு

போராடமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்ததால் இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2018 10:15 PM GMT (Updated: 12 July 2018 9:58 PM GMT)

போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல், இனிமேல் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்ததால், இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல், இனிமேல் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்ததால், இயக்குனர் கவுதமனுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பிரச்சினை தமிழகத்தில் தீவிரமடைந்திருந்த நிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது, இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது, போலீசாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் கவுதமனை போலீசார் கடந்த ஜூன் 24-ந் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.

அப்போது, கவுதமன் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், கத்திபாரா பாலத்தை பூட்டு போட்டு நடத்திய போராட்டத்தினால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது என்றும் அரசு வக்கீல் முகமது ரியாஸ் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இனிமேல் போலீசாரிடம் முன் அனுமதி பெறாமல், போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து கவுதமன் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, உத்தரவாதம் அளித்து மனுவை கவுதமன் சார்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கவுதமன் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story