மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற வனக்காவலர் வெட்டிக்கொலை பணம் தர மறுத்ததால் மகன் வெறிச்செயல் + "||" + Retired wild card cracker

ஓய்வு பெற்ற வனக்காவலர் வெட்டிக்கொலை பணம் தர மறுத்ததால் மகன் வெறிச்செயல்

ஓய்வு பெற்ற வனக்காவலர் வெட்டிக்கொலை பணம் தர மறுத்ததால் மகன் வெறிச்செயல்
பனப்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற வனக்காவலரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 69), ஓய்வு பெற்ற வனக்காவலர். இவரது மனைவி ஆயம்மாள் (60). இவரது மகன் சாந்தசீலன் (40). இவர் தனது மனைவி, குழந்தையுடன் கோவிந்ததாங்கலில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தந்தை மாசிலாமணியிடம் ரூ.1½ லட்சம் கேட்டு சாந்தசீலன் தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சாந்தசீலன் தந்தையை அடித்து, உதைத்தார். மேலும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மாசிலாமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

நேற்று காலை மாசிலாமணியின் தங்கை வசந்தா (62) அண்ணனின் வீட்டுக்கு வந்தார். அங்கு மாசிலாமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தசீலனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சாந்தசீலன் நேற்று காலை காட்டுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கத்தியுடன் சரண் அடைந்தார். இதையடுத்து சாந்தசீலனை பாணாவரம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஒப்படைத்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.