முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 7:27 PM GMT)

முன்னாள் டி.ஜி.பி.யும், காஷ்மீர் மாநில பாதுகாப்பு ஆலோசகருமான விஜயகுமார் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

முன்னாள் டி.ஜி.பி.யும், காஷ்மீர் மாநில பாதுகாப்பு ஆலோசகருமான விஜயகுமார் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பிரிவில் டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் விஜயகுமார். இவர், அதிரடிப்படையின் தலைவராக இருந்தபோது, கடந்த 2004–ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை சுட்டுக் கொன்றார். இதற்காக, தமிழக அரசு அதிரடிப்படையில் பணியாற்றிய அனைவருக்கும் ரொக்கப்பரிசும், பதவி உயர்வும் வழங்கியது.

அதேபோல, அதிரடிப்படை தலைவரான விஜயகுமாருக்கு, ரொக்கப்பணமும், ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை, மேற்கு அண்ணாநகரில் ஒரு வீடு ரூ.1 கோடியே 8 லட்சத்துக்கு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து, தமிழக அரசு வாங்கி, விஜயகுமாருக்கு வழங்கியது. இந்த வீட்டை 2009–ம் ஆண்டு ரூ.1 கோடியே 99 லட்சத்துக்கு விற்பனை செய்தார்.

இதன்பின்னர் 2010–11–ம் நிதியாண்டில், அவர் ரூ.1.39 கோடிக்கு மட்டும் வருமான கணக்கை காட்டி, வரி செலுத்தினார். அப்போது, இந்த வீடு தனக்கு பரிசாக தமிழக அரசு வழங்கியுள்ளது. அதனால், அரசு வாங்கிய தொகை ரூ.1 கோடியே 8 லட்சம் என்பது எனக்கான பரிசாக கருதவேண்டும். அந்த தொகையை கழித்துவிட்டு, வீட்டை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த மீதத்தொகைக்கு மட்டுமே என்னிடம் வரி வசூலிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

இதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. இவ்வாறு பரிசாக கிடைத்த சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு எல்லாம் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்று கூறியது. இதுகுறித்து விஜயகுமாருக்கு நோட்டீசும் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், அந்த நோட்டீசின் அடிப்படையில் விஜயகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Next Story