புராதன சிலைகளை பாதுகாக்க வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு ஆண்டு ஆகியும் அமல்படுத்த முடியாதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


புராதன சிலைகளை பாதுகாக்க வேண்டும் என விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு ஆண்டு ஆகியும் அமல்படுத்த முடியாதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 July 2018 10:15 PM GMT (Updated: 13 July 2018 7:58 PM GMT)

தமிழக கோவில்களில் உள்ள புராதன சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகள் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட 21 நிபந்தனைகளை பிறப்பித்து ஒரு ஆண்டு ஆகியும் அவற்றை அமல்படுத்த முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

தமிழக கோவில்களில் உள்ள புராதன சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகள் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட 21 நிபந்தனைகளை பிறப்பித்து ஒரு ஆண்டு ஆகியும் அவற்றை அமல்படுத்த முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள புராதன சாமி சிலைகள் கடத்தப்படுகிறது. இந்த சிலைகளை, சர்வதேச கடத்தல் கும்பலுடன் கைகோர்த்துக் கொண்டு, சிலைக்கடத்தல் பிரிவு போலீசார் கடத்தியுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டில் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து, தமிழகம் முழுவதும் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும், கோவில் சிலைகளை பாதுகாக்க அறைகள் உள்ளிட்ட 21 நிபந்தனைகளை விதித்து, அவற்றை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அந்த நிபந்தனைகள் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 512 கோவில்களில் சிலைகளை பாதுகாக்கும் வசதிகள் உள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ‘மிக நீண்டதொரு விசாரணைக்கு பின்பும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் இதுபோன்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால், உங்கள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போல், பாதுகாப்பு அறைகள் இருப்பது போல் தெரியவில்லை. அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அறைகளை கட்டுவதற்கு 2021–ம் ஆண்டு வரை காலஅவகாசம் வேண்டும் என்கிறீர்கள். குறுகிய காலத்தில் இதை கட்டி முடிக்க முடியும். ஆயிரக்கணக்கான கட்டிட ஒப்பந்ததாரர்கள் தமிழகத்தில் உள்ளனர். அப்படி இருக்கும்போது இவ்வளவு காலஅவகாசம் எதற்காக வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘முக்கியமான, குறிப்பிட்ட கோவில்களுக்கு பாதுகாப்பு அறை கட்ட முன்னுரிமை வழங்கப்படும்’ என்றார்.

இதை கேட்ட நீதிபதி, சாமி சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகள் கட்டுவதில் காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட நேரிடும். 2017–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி இந்த ஐகோர்ட்டு 21 நிபந்தனைகளை விதித்து பிறப்பித்த உத்தரவை தமிழக அரசால் இன்னும் அமல்படுத்த முடியவில்லை. உத்தரவை அமல்படுத்தாததால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது’ என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், ‘2021–ம் ஆண்டுக்குள் தமிழக கோவில்களில் உள்ள எல்லா சிலைகளும் கொள்ளை அடிக்கப்பட்டுவிடும். அதன் பிறகுதான் பாதுகாப்பு அறைகள் கட்ட நடவடிக்கை எடுப்பீர்களா? மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? 100 சதுர அடியில் ஒரு அறையை கட்டுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்?. இன்னும் 12 மாதங்களுக்குள் எல்லா கோவில்களிலும் சிலை பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்புதான் முக்கியம். இதை ஐகோர்ட்டு கண்காணிக்கும். விசாரணையை வருகிற 30–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் முக்கிய சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2017–ம் ஆண்டு செப்டம்பர் 12–ந் தேதி புகார் கொடுத்தேன். இதுவரை வழக்குக்கூட பதிவு செய்யவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதி, மனுதாரர் கொடுத்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று வருகிற 20–ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story