உலக அரங்கில் தமிழ் இடம் பிடிக்க வேண்டும் என்பது இலக்கு பிறந்தநாள் விழாவில், கவிஞர் வைரமுத்து பேட்டி


உலக அரங்கில் தமிழ் இடம் பிடிக்க வேண்டும் என்பது இலக்கு பிறந்தநாள் விழாவில், கவிஞர் வைரமுத்து பேட்டி
x
தினத்தந்தி 13 July 2018 10:30 PM GMT (Updated: 13 July 2018 8:48 PM GMT)

உலக அரங்கில் தமிழ் இடம் பிடிக்க வேண்டும் என்பது இலக்கு என்று பிறந்தநாள் விழாவில், கவிஞர் வைரமுத்து கூறினார்.

சென்னை, 

வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா கவிஞர்கள் திருநாள் விழாவாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பொன்மணி அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கள் ஆருண், ராணி, கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், வெற்றி தமிழர் பேரவை பொதுச்செயலாளர் முத்தய்யா, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்கூறினர்.

விழாவில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு, கவிஞர் திருநாள் விருதை கவிஞர் வைரமுத்து வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்துவிடம், உங்களுடைய பிறந்தநாள் இலக்கு என்னவென்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

லட்சியம் தொடர வேண்டும் என்றால் பயணம் நீள வேண்டும் என்றால் அடைய முடியாத இலக்கு என்ற ஒன்றை மனிதன் தீர்மானிக்க வேண்டும். அப்படி பார்த்தால் எனக்கும் ஒரு இலக்கு உண்டு. உலக மொழிகளில் தமிழும் அங்கிகரிக்கப்பட வேண்டும். உலக செவ்வியல் மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உலக அரங்கில் இடம் பிடிக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பது நாகரிகமாக இருக்க முடியாது. இந்தியாவில் எல்லா தேசிய மொழிகளும் தங்கள் தனித்தன்மையை, அடையாளத்தை, இனத்தின் பொறுமையை காப்பாற்றிக் கொள்வதில் தான் இந்தியாவின் ஒருமைப்பாடு இருப்பதாக நினைக்கிறோம்.

எனவே மத்திய அரசு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்க கூடிய நாள் தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சிறந்த நாள் என்று நான் நம்புகிறேன்.

22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் ஒரு உறுப்பினர் உரையாற்றலாம் என்ற ஒரு புதிய விதியை கொண்டு வந்திருப்பதற்காக நாடாளுமன்றத்தை நான் பாராட்டுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் சென்றுள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டி.டி.வி.தினகரன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.மோகன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, நடிகர் விவேக் உள்பட முக்கிய பிரமுகர்களும் தொலைபேசி வாயிலாக கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story