வருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


வருமான வரித்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2018 12:00 AM GMT (Updated: 16 July 2018 10:20 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் வீடுகள் மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது ‘எஸ்.பி.கே’ கட்டுமான நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதை, பொது நலன் கருதி வரவேற்கிறேன்.

‘எஸ்.பி.கே’ என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களையும், சில துணை நிறுவனங்களையும் உருவாக்கி அவற்றில் முதல்-அமைச்சரின் சம்பந்தியும், இந்த ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் நாகராஜன் பங்குதாரர்களாக இருந்து கொண்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களைத் தட்டிப்பறித்து, அ.தி.மு.க. ஆட்சியில் இருவரும் ஏகபோகமாக கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்திற்கு விலங்கு

இந்நிலையில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனையில் ரூ.80 கோடிக்கும் மேல் ரொக்கமாகவே கைப்பற்றப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் சோதனையில் இருக்கின்றன என்பதும், இந்த செய்யாதுரை மற்றும் நாகராஜன் அலுவலகங்கள் அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பதும் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலைத்துறையின் நீண்ட நெடிய ஊழல் சரித்திரத்தின் சந்தி சிரிக்கும் சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் அமைந்திருக்கின்றன.

உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் ஒப்பந்தப் பணிகளை கொடுத்து, அந்தப் பகல் கொள்ளையை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்க முடியாதபடி சட்டத்திற்கும் விலங்கு மாட்டியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

பதவி விலக வேண்டும்

முறையான வருமான வரித்துறை சோதனைகளுக்கும், விசாரணைக்கும் வழிவிடும் வகையிலும், ஏற்கனவே தி.மு.க. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்திருக்கும் ஊழல் புகார்களை சுதந்திரமாக விசாரிப்பதற்கு ஏற்ற முறையிலும், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி விலகிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story