வருமான வரித்துறை சோதனை மேலும் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம் பறிமுதல்


வருமான வரித்துறை சோதனை மேலும் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 July 2018 11:45 PM GMT (Updated: 17 July 2018 11:15 PM GMT)

தமிழகத்தில் 2-வது நாளாக வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேலும் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம் சிக்கியது.

சென்னை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செய்யாத்துரை. அரசு முதல்நிலை காண்டிரக்டரான இவர், எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தை நிறுவி, நெடுஞ்சாலை துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

செய்யாத்துரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் உள்ளிட்டோர் நடத்தி வரும் எஸ்.பி.கே. நிறுவனம், கட்டுமான துறை மட்டும் அல்லாது நூற்பு ஆலை, கல்குவாரி உள்ளிட்ட சில அரசு ஒப்பந்தகளையும் பெற்று நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் சில ஆண்டுகளாகவே மோசடி செய்து பணம் பெறுவதாகவும், சரியாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை, எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடு உள்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் பார்க்கிங்’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.120 கோடி, 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

வருமானவரி சோதனை 2-வது நாளாக நேற்றும் நடந்தது. அருப்புக்கோட்டை, மதுரை மற்றும் சென்னையில் ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரெங்கன் சாலை, பார்த்தசாரதி தெரு, சாரதி கார்டனில் உள்ள செய்யாத்துரையின் உறவினர் தீபக், அவருக்கு சொந்தமான கோவிலாம்பாக்கத்தில் உள்ள கம்பெனி, எஸ்.பி.கே. நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ள சேத்துப்பட்டு, மேத்தாநகர், அண்ணாநகர், அபிராமபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய இடங்களிலும் வருமானவரி துறையினர் நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அபிராமபுரத்தில் உள்ள அலுவலகத்தில் மதியத்துடன் சோதனையை அதிகாரிகள் முடித்து கொண்டனர். மீதம் உள்ள இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்தது.

சோதனையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்த நிறுவனத்தினர் கார்களில் பணம், நகை, ஆவணங்களை எடுத்துக்கொண்டு சுற்றி வருவதாகவும், சில இடங்களில் கார்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து கார்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணத்தை, எந்திரம் மூலம் அதிகாரிகள் எண்ணி வருகின்றனர். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் மதிப்பீடு செய்தனர். 2-வது நாளில் மேலும் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் செய்யாத்துரையின் மகன் நாகராஜ் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் விசாரணையை வருமான வரித்துறையினர் தொடங்கினர். இந்த விசாரணைக்கு பிறகு மேலும் கூடுதலான இடங்களில் சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எஸ்.பி.கே. நிறுவனத்தின் நிர்வாகி செய்யாத்துரைக்கு சொந்தமான இடங்களில் 16-ந்தேதி காலை 5.30 மணிக்கு வருமானவரி சோதனை தொடங்கியது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரி சோதனை நடந்தாலும், முக்கியமான 10 இடங்களில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.170 கோடி, 105 கிலோ தங்கம் 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன் கணக்கில் காட்டப்படாத சொத்துகள், தவறு செய்ததற்கான ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நாகராஜ் வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் மட்டும் பறிமுதல் ஆனது. மீதம் உள்ள பணம் மற்றும் தங்கம் பணியாளர்கள், கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 2 பி.எம்.டபிள்யூ காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

வெளிப்படுத்தப்படாத சொத்துகள் குறித்தும் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவற்றை ஒப்புக்கொண்டனர். அத்துடன் துணை நிறுவனங்களின் செலவினங்களை அதிகரித்ததும், பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி காண்பித்ததன் மூலம் கணக்கில் அடங்காத சொத்துகள் வந்ததாக விளக்கம் அளித்து உள்ளனர். முக்கிய துணை நிறுவனங்கள், ஆடிட்டர்கள் மற்றும் நகை கடைக்காரர்கள் கணக்கில்லாத பணத்தை தங்கமாக மாற்றியதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story