கமுதி அருகே காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீட்டுச்சுவரை உடைத்து சோதனை


கமுதி அருகே காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீட்டுச்சுவரை உடைத்து சோதனை
x
தினத்தந்தி 17 July 2018 11:54 PM GMT (Updated: 17 July 2018 11:54 PM GMT)

கமுதி அருகே, காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான வீட்டின் சுவரை உடைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கமுதி, 

தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் முதல்நிலை ஒப்பந்ததாராக பணிகள் செய்து வருபவர், செய்யாத்துரை. இவரது பூர்வீகம், கீழமுடிமன்னார்கோட்டை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இந்த கிராமத்தில் இவரது பூர்வீக வீடு உள்ளது. இவரது எஸ்.பி.கே. நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் காண்டிராக்டர் செய்யாத்துரைக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தங்கும் விடுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, கீழமுடிமன்னார்கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் பூர்வீக வீடு மற்றும் தோட்டங்களில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சுவர் உடைப்பு

நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் கீழமுடிமன்னார்கோட்டை வந்தனர். செய்யாத்துரையின் வீட்டுக்கு வந்த அவர்கள், இரும்புக்கேட்டை உடைத்து வீட்டுக்கு உள்ளே சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு அறையை உடைத்து பார்த்த போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை சிக்கின. அத்துடன் வீட்டுக்குள் சில சுவர்களையும் இடித்து சோதனை நடத்தினார்கள். மாலை வரையும் சோதனை நீடித்தது.

அருப்புக்கோட்டையிலும் நீடித்த சோதனை

அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியிலும் காண்டிராக்டர் செய்யாத் துரையின் வீடுகளிலும் நிறுவனங்களிலும் நேற்று 2-வது நாளாக சோதனை நீடித்து.

நேற்று முன்தினம் வருமானவரித்துறையினர் 5 கார்களில் இங்கு வந்து அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை வீட்டின் ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். அங்கு 6 அதிகாரிகளை இரவு தங்க வைத்து விட்டு மற்ற அதிகாரிகள் புறப்பட்டுச்சென்றனர்.

செய்யாத்துரையிடம் விசாரணை

சோதனையின் போது சில ஆவணங்களை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றின் விவரங்கள் பற்றி செய்யாத்துரையிடமும் அவருடைய மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்பு, கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வைரங்களை கணக்கிடும் பணிக்காக நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து மதிப்பிடும் பணியை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்யாத்துரையின் மகன் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு வருமான வரி அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அமைச்சர்கள் தங்கும் ஓட்டல்

மதுரை கே.கே.நகர், பூங்காவிற்கு எதிரே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் எஸ்.பி.கே. என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரன் கவனித்து வருகிறார். இந்த ஓட்டலிலும் நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 10 மணி வரை நடந்தது. அப்போது ஓட்டலில் இருந்து பல்வேறு சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இந்த எஸ்.பி.கே. ஓட்டலுக்கு அமைச்சர்கள் சிலர் அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். குறிப்பாக மூத்த அமைச்சர் ஒருவர் அங்கு அடிக்கடி வந்து தங்குவது வழக்கம். அந்த விவரங்கள் பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈஸ்வரனிடம் விசாரித்துள்ளனர். 

Next Story