வருமான வரி சோதனை: “எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


வருமான வரி சோதனை: “எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்” மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2018 11:45 PM GMT (Updated: 18 July 2018 10:08 PM GMT)

எடப்பாடி பழனிசாமி தனது முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

வருமானவரி சோதனை

கேள்வி:- தமிழகத்தில் 2 நாட்களாக முதல்-அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடக்கிறதே?

பதில்:- முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவருடைய ‘பார்ட்னர்’ ஆகியோருடைய வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய நேரத்தில் ரூ.180 கோடி ரொக்கமாகவும், 100 கிலோ தங்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில், பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகவே வெளிவந்திருக்கிறது.

பதவி விலக வேண்டும்

பொதுப்பணித்துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருக்கக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. இதுவரை முதல் -அமைச்சருடைய உறவினர்களுக்கு இப்படி ஒரு ‘டெண்டர்’ விட்டதாக வரலாறு கிடையாது. இதுகுறித்து வெளிப்படையாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரையில் வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருந்து வருகிறார்.

மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி. ஆகவே, இதற்கு அவர் முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டு, விசாரணை முழு அளவில் சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்று சொன்னால் உடனடியாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது தான் சாலப் பொருத்தமாக இருக்க முடியும்.

கேள்விக்குறியாக உள்ளது

அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையை பொறுத்தவரையில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே, இந்த ஆட்சியிலே தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி உள்ளனர். உதாரணமாக ராம மோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர், மணல் மாபியா சேகர் ரெட்டி போன்றவர்களுடைய இல்லங்களிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் என்ன ஆனது? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அதுபோல இதுவும், நீர்த்துப் போவதற்குள் உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு முழுமையான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜெயக்குமாரின் பதில் என்ன?

கேள்வி:- ‘இந்த ஒப்பந்ததாரர்கள் அ.தி.மு.க.வில் மட்டும் இல்லை, தி.மு.க ஆட்சிக் காலத்திலும் இருந்தார்கள், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு’, என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் கொடுத்திருக்கிறாரே?

பதில்:- தி.மு.க ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம் நடக்கவில்லை. குறிப்பாக இதுபோன்று வருமான வரித்துறை எல்லாம் சோதனை செய்யவில்லை. இன்றைக்கு இவர்கள் கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சான்றாக முதல்-அமைச்சருடைய சம்பந்திகளே இருக்கிறார்கள். இதற்கு ஜெயக்குமார் என்ன பதில் சொல்ல போகிறார்? என்று கேளுங்கள்.

கேள்வி:- துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தி.மு.க சார்பில் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறீர்கள். இதில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையான வக்கீல்களை வைத்து...

கேள்வி:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதும் மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்கு சி.பி.எஸ்.சி. ‘அப்பீல்’ செய்துள்ளதே?

பதில்:- இந்த உத்தரவு வருவதற்கு கூட தமிழக அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் தான். இப்பொழுதாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு ‘நீட்’ பிரச்சினைகளில் இதுவரை மெத்தனமாக இருந்ததை போல் இல்லாமல் சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்திருக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே, முறையாக முறையான வக்கீல்களை வைத்து வாதாட வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். 

Next Story