ஜெயலலிதா தியானத்தில் இருந்தாரா? அப்பல்லோ செவிலியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி


ஜெயலலிதா தியானத்தில் இருந்தாரா? அப்பல்லோ செவிலியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 19 July 2018 11:45 PM GMT (Updated: 19 July 2018 11:13 PM GMT)

அப்பல்லோ மருத்துவமனை செவிலியரிடம் ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தாரா, இல்லையா... என்பதை கண்டுபிடிக்க முடியாதா? என்று நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் செவிலியர்களாக பணியாற்றி வரும் சாமுண்டீசுவரி, அனீஸ் ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். செவிலியர் சாமூண்டீசுவரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் பல நாட்கள் பணியில் இருந்தேன். நான் பணியில் இருந்தபோது ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாகக்கூட யாரும் பார்க்கவில்லை. சசிகலா மட்டும் அவ்வப்போது வந்து செல்வார். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டுக்குள் பிரத்யேக ஆடையுடன் தான் செல்ல வேண்டும்.

தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருக்கும் நோயாளிகளை வெளியில் இருந்து வருபவர்கள் பார்க்க அனுமதிப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவை பார்க்க இவர்களை மட்டும் தான் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தவில்லை.

பிரத்யேக உடை அணிந்து கவர்னர் வார்டுக்குள் வந்து ஜெயலலிதாவை நேரில் பார்த்து இருக்கலாம். அவர், ஏன் அவ்வாறு செல்லவில்லை என்பது எனக்கு தெரியாது. ஜெயலலிதா பெரும்பாலான நாட்கள் வெண்டிலேட்டருடன் தான் இருந்தார்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆண் செவிலியரான அனீஸ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி நான் பணியில் இருந்தபோது இரவு 10 மணிக்கு ஆம்புலன்சுடன் போயஸ்கார்டன் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நானும், மருத்துவர் சினேகாஸ்ரீயும் ஆம்புலன்சுடன் இரவு 10.06 மணிக்கு போயஸ்கார்டன் போய் சேர்ந்தோம்.

ஜெயலலிதா அறைக்குள் சென்றபோது அவர், கண்களை மூடியபடி சோபாவில் அமர்ந்து இருந்தார். மருத்துவர் சினேகாஸ்ரீ ஜெயலலிதாவின் கன்னத்தை தட்டி ‘மேடம்...மேடம்’ என்று அழைத்துப் பார்த்தார். அப்போது ஜெயலலிதா லேசாக முனகினார். ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவை பரிசோதித்த போது குறைவாக இருந்தது தெரிந்தது. உடனடியாக ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வந்து ஆக்சிஜன் செலுத்தினேன்.

பின்னர், நானும், ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமாரும் ஜெயலலிதாவை தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து படிக்கட்டுகள் வழியாக இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஜெயலலிதா இருந்த அறையில் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் மட்டுமே இருந்தனர். ஆம்புலன்சில் நான், சசிகலா, சிவக்குமார், சினேகாஸ்ரீ ஆகியோர் இருந்தோம்.

போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவு வார்டுக்கு கொண்டு செல்லப்படும்வரை ஜெயலலிதா யாரிடமும் பேசவில்லை. யாரிடமும் பேசும் நிலையிலும் அவர் இல்லை.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

போயஸ்கார்டனில் கண்களை மூடியபடி ஜெயலலிதா சோபாவில் அமர்ந்து இருந்ததாக அனீஸ் கூறியபோது குறுக்கிட்ட நீதிபதி அப்படியென்றால் ஜெயலலிதா தியானம் செய்து கொண்டிருந்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் செவிலியரான உங்களுக்கு, ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தாரா, இல்லையா... என்பது தெரியாதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயலலிதா மயக்கநிலையில் இருந்தாரா என்பது தெரியாது என்று அனீஸ் பதில் அளித்துள்ளார். 

Next Story