மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் ஆய்வு பணி முடித்து திரும்பியபோதுகவர்னர் கார் மீது அரசு பஸ் மோதல் + "||" + Government bus clash over Governor's car

புதுக்கோட்டையில் ஆய்வு பணி முடித்து திரும்பியபோதுகவர்னர் கார் மீது அரசு பஸ் மோதல்

புதுக்கோட்டையில் ஆய்வு பணி முடித்து திரும்பியபோதுகவர்னர் கார் மீது அரசு பஸ் மோதல்
கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்ற கார் மீது அரசு பஸ் மோதியது. இதில் காயம் இன்றி கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அன்னவாசல், 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருச்சி சென்றார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ராஜாமணி மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு முடிந்த பின்னர் கார் மூலம் புதுக்கோட்டைக்கு சென்ற கவர்னர், அங்கு புதிய பஸ் நிலையம் அருகில் தூய்மை பணிகளை ஆய்வு செய்ததோடு, அங்கு கிடந்த குப்பைகளையும் அகற்றினார். அதன் பின்னர் ரோஜா இல்லத்தில் ஓய்வு எடுத்த கவர்னர் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்களை வாங்கினார். தொடர்ந்து வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். அவரது காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் புடைசூழ கவர்னரின் ‘கான்வாய்’ திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தது.

திருக்கோகர்ணம் அருகே முத்துடையான்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு அரசு பஸ் திடீரென கவர்னர் அமர்ந்து இருந்த காரின் வலதுபக்க கதவில் லேசாக மோதியது. இதில் அந்த பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. ஆனால் கவர்னருக்கோ, காரை ஓட்டிய டிரைவருக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

உடனடியாக கவர்னரின் கார் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. கான்வாயில் வந்த வேறு காரில் கவர்னரை ஏற்றி, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். கவர்னரின் கார் மீது மோதிய அரசு பஸ்சை உடனடியாக போலீசார் ஓரம் கட்டினார்கள். அதன் டிரைவர் மற்றும் கண்டக்டரை பிடித்து விசாரித்தனர்.

இதில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த விஜயசுந்தரம் (வயது 47) என தெரியவந்தது. அவரை போலீசார் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, வேறு பஸ் மூலம் புதுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி திருக்கோ கர்ணம் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.