ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு


ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 July 2018 11:15 PM GMT (Updated: 21 July 2018 8:29 PM GMT)

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், திவ்யா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது தாயார் ஜெயந்தி, இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கையில் நடந்த போரின் காரணமாக இந்தியாவுக்கு வந்து எனது தந்தையான பிரேம்குமாரை கடந்த 1992-ம் ஆண்டு திருமணம் செய்தார். எனது தாயார் தமிழகத்தில் தான் படித்துள்ளார். அவர், இந்தியர் என்பதற்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பணிநிமித்தமாக இத்தாலி சென்று, அங்கிருந்து அடிக்கடி இந்தியா வந்து செல்வார். கடந்த ஜூலை 1-ந்தேதி எனது தாயார் சட்டவிரோதமாக இந்தியா வந்துள்ளதாகக் கூறி அவரை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே விமான நிலைய அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எனது தாயாரை விடுவித்து, மீண்டும் இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்திய குடிமகன்

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இலங்கையை சேர்ந்த ஜெயந்தியின் இலங்கை பாஸ்போர்ட் கடந்த 1994-ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. அதன்பிறகு மோசடியாக இந்தியாவில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். எனவே தான் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி டி.ராஜா, ‘ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை பெற்றுவிட்டதால் மட்டும் ஒருவர் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது. அவற்றை எல்லாம் அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜெயந்தி இலங்கை பிரஜை என்று கூறி, அந்நாட்டு அரசு அவருக்கு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. எனவே, அவரை விடுவிக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். 

Next Story