மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுகிறது, நீர் திறப்பு 20,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுகிறது, நீர் திறப்பு 20,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 July 2018 3:09 PM GMT (Updated: 22 July 2018 3:09 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 20,000 கன அடியில் இருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


 
சேலம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் 2 அணைகளில் இருந்தும் கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில், மாலை 5 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்தது. 

நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை 14வது நாளாக நீடிக்கிறது. கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து கண்காணித்து வருகின்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 17-ந் தேதி இரவு 9 மணிக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 19 ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 109 அடியாக இருந்தது. 

அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட பல மடங்கு அதிகரித்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.  காலை 8 மணி நிலவரப்படி 116.98 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், பகல் 12 மணியளவில் 117.32 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது என்பதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நாளைக்குள் எட்டிப்பிடிக்கும். 

அணையின் 16 கண் மதகு பாலத்தில் இருந்து விநாடிக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது 

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் 16 கண் பாலம் பகுதியையட்டி அமைந்துள்ள தங்கமாபுரி பட்டினம் மற்றும் காவிரி கரையையட்டிய கோல்நாயக்கன்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் வருவாய்த்துறை மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இரவு 8 மணி முதல் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரை மற்றும் கால்வாய் கரை பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், நீச்சல் அடிப்பதையோ, செல்பி எடுப்பதையோ, காவிரி ஆற்றின் கரையில் நின்று தண்ணீர் வரத்தை வேடிக்கை பார்ப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story