காவிரி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்


காவிரி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 July 2018 11:45 PM GMT (Updated: 22 July 2018 10:13 PM GMT)

மேட்டூர் காவிரி ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய தம்பி சரவணன் (வயது 35). திருப்பூர் மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் விசைத்தறிக்கூடம் நடத்தி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி, ரெட்டியூரில் உள்ள அண்ணன் வீட்டுக்கு அவர் குடும்பத்துடன் வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் சரவணன், அவருடைய மனைவி மைதிலி (32), மகன் ஹரிஹரன் (9), மைதிலியின் சகோதரி மகள் நவீனா (15), கோபாலின் மகள்களான என்ஜினீயரிங் மாணவிகள் வாணிஸ்ரீ (19), தனுஸ்ரீ (18) ஆகியோருடன் அருகில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படும் காவிரி ஆற்று பகுதிக்கு குளிக்க காரில் வந்தனர்.

அங்கு அவர்கள் குளித்தபோது, ஒருவர் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அவர் தண்ணீரின் வேகத்தால் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லவே மற்ற 5 பேரும் அவரை காப்பாற்ற ஒருவர், பின் ஒருவராக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினர்.

அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர், ஆற்றில் சிலர் அடித்து செல்லப்படுவதை பார்த்து காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். உடனே அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள், ஓடிவந்து ஆற்றில் மூழ்கி கொண்டிருந்த மாணவி தனுஸ்ரீயை காப்பாற்றினர். ஆனால் மற்றவர்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து மேட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் மற்றும் அப்பகுதிக்கு பரிசலுடன் வந்த மீனவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 4 மணி நேர தேடுதலில் சரவணன், மைதிலி, நவீனா, வாணிஸ்ரீ ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிறுவன் ஹரிஹரனை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு மீட்புபணிகளை துரிதப்படுத்தினர்.

இதற்கிடையே உயிருடன் மீட்கப்பட்டு, மற்றவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் கதறி அழுத தனுஸ்ரீயை அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.

அப்போது தனுஸ்ரீயின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்களில் தனுஸ்ரீயின் தாயார், இன்று ஆற்றில் தண்ணீர் கூடுதலாக வரும் என்பதால் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று கூறினேன், கேட்காமல் வந்து விட்டு இப்போது இப்படி ஆகிவிட்டதே என்று கண்ணீர் ததும்ப அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. உயிர் தப்பிய மாணவி தனுஸ்ரீ வேதனையுடன் கூறியதாவது:-

அனைவரும் தண்ணீரில் மூழ்கிவிட்ட நிலையில், என்னை மட்டும் சிலர் ஆற்றில் குதித்து காப்பாற்றினர். மற்ற அனைவரின் உடல்களையும் மீனவர்களும், தீயணைப்பு படையினரும் மீட்டு வந்தனர். இதை பார்த்தபோது, சிறிது நேரத்திற்கு முன்பு என்னுடன் சகஜமாக பேசிக்கொண்டு இருந்த எனது குடும்பத்தினரை கண்முன்னே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இழந்து விட் டேன். இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story