தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தந்தி டி.வி. கருத்து கணிப்பில் 51 சதவீதம் மக்கள் தகவல்


தமிழக அரசியலில் ரஜினி, கமல் சாதிக்க முடியாது தந்தி டி.வி. கருத்து கணிப்பில் 51 சதவீதம் மக்கள் தகவல்
x
தினத்தந்தி 23 July 2018 12:00 AM GMT (Updated: 22 July 2018 10:35 PM GMT)

நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திப்பதற்கான பூர்வாங்க வேலைகளை அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கி விட்டன. கூட்டணி, தொகுதி பேரங்கள் தொடர்பான ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சென்னை,

இந்த நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால், கட்சிகளின் செல்வாக்கை எடைபோடும் முக்கிய தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பெரும் ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்து இருக்கிறார்கள். கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

ஆனால், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துவிட்ட போதிலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. அரசியல் களத்துக்கு தயாராகும் வகையில், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்களை பலப்படுத்தி வருகிறார்.

விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு, புதிய தலைவர்களின் வரவு போன்ற காரணங்களால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில், தந்தி டி.வி. பரபரப்பான கருத்து கணிப்பை நடத்தி இருக்கிறது.

மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்துள்ள தந்தி டி.வி. கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பான பல கருத்து கணிப்புகளை நடத்தி இருக்கிறது. அந்த கருத்து கணிப்புகள் அனேகமாக சரி என்பதை தேர்தல் முடிவுகள் எதிரொலித்து இருக்கின்றன.

அந்த வகையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? புதிய வரவுகளான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார்களா? என்பது பற்றி தந்தி டி.வி. தற்போது விரிவான கருத்து கணிப்பை நடத்தி உள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,250 பேரிடம் தனித்தனியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 4,125 பேர் ஆண்கள்; 4,125 பேர் பெண்கள்.

ஜூலை 1–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

 இந்த கருத்து கணிப்பில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்ற பரபரப்பான முடிவு தெரியவந்து உள்ளது.

அரசியலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெற்றி பெறுவார்களா? என்று மக்களிடம் கருத்து கேட்டதில், 51 சதவீதம் பேர் அவர்களால் வெற்றி பெற முடியாது  என்று  கூறி  இருக்கிறார்கள்.

இதுபோன்ற அதிரடியான முடிவுகளைக் கொண்ட ‘தந்தி டி.வி.’ கருத்து கணிப்பு இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.

Next Story