2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது


2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது
x
தினத்தந்தி 25 July 2018 11:35 PM GMT (Updated: 25 July 2018 11:35 PM GMT)

2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது என்று டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளித்த மருத்துவர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் பாபுமனோகர் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது மூச்சுத்திணறல் பிரச்சினைக்காக அவருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டு ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்த சிகிச்சையை மருத்துவர் பாபு மனோகர் தான் மேற்கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டதால் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி முதல் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. அன்றைய தினம் வென்டிலேட்டர் பொருத்தவில்லை என்றால் மரணம் கூட சம்பவித்து இருக்கலாம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. இதன்பின்னரும் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, தொடர்ந்து வென்டிலேட்டர் பொருத்தினால் இருதயம், நுரையீரல் பாதிக்கும் என்று ஆலோசனை கூறினார். இதைத்தொடர்ந்து 7.10.2016 அன்று, சுவாசக்குழாயில் ஓட்டை போட்டு டிரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்திருந்தாலும் அந்த சமயத்தில் மரணம் சம்பவித்து இருக்கலாம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.

‘டிரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளதே?, அதுபோன்று கொடுக்கலாமா?’ என்று பாபுமனோகரிடம் ஆணையம் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘சுவாசக்குழாய் பிரச்சினை மட்டும் இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவற்றை சாப்பிடலாம் என்றும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதேவேளையில் உடல்நிலையில் வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை பொறுத்து தான் இதுபோன்ற உணவுப்பொருட்களை அனுமதிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.

‘ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்த நிலையில் ஐஸ்கிரீம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வாமை ஏற்படாதா? என்று ஆணையத்தின் தரப்பு வக்கீல்கள் கேள்வி எழுப்பியதற்கு அதுதொடர்பாக தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்களை கேட்டால் தான் தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.

துக்ளக் பதிப்பாளர் சுவாமிநாதன் நேற்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் சுவாமிநாதன், ‘ஜெயலலிதா மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. எனவே, தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை திரும்ப பெற வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 

Next Story