என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது


என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது
x
தினத்தந்தி 26 July 2018 12:07 AM GMT (Updated: 26 July 2018 12:07 AM GMT)

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர கடந்த வருடம் வரை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக கலந்தாய்வு நடத்தி வந்தது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்க்க வந்தனர். இதில் தகுதியானவர்களின் விண்ணப்பம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 ஆகும். அவர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள். 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள். கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

நேற்று முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வுக்கு இணையதளத்தில் ( www.tnea.ac.in ) போய் விருப்ப குரூப், எந்த கல்லூரி என்பதை கிளிக் செய்ய வேண்டும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 7 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்காக பணம் செலுத்தினார்கள்.

தரவரிசை பட்டியலின்படி முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யாரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.

முதல் இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி கூறுகையில், ‘நான் பி.எஸ்சி வேதியியல் (ஆனர்ஸ்) படித்து வருகிறேன். என்ஜினீயரிங் கலந்தாய்வில் நான் கலந்துகொள்ளவில்லை’ என்றார்.

2-வதாக வந்த மதுரையை சேர்ந்த மாணவர் எஸ்.ரித்விக் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததால், அவரும் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 3-வது இடத்தில் வந்த திருச்சியை சேர்ந்த ஆர்.ஸ்ரீவர்ஷினி, மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்ததால் அவரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. எனவே முதல் 3 இடங்களில் வந்தவர்களும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை.

நேற்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் எந்த குரூப், எந்தக்கல்லூரி என்பதை இறுதி முடிவு எடுத்து ஆன்லைனில் குறிப்பிட வேண்டும். 28-ந் தேதி அவர்கள் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று தற்காலிக உத்தரவை மாணவர் சேர்க்கை செயலாளர் ஒதுக்கிவிடுவார். 28 மற்றும் 29-ந் தேதிகளில் நிரந்தர உத்தரவை உறுதி செய்வார். 30-ந் தேதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள்.

2-வது கட்ட கலந்தாய்வு 30-ந் தேதி தொடங்குகிறது. 

Next Story