லாரிகள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பு


லாரிகள் வேலைநிறுத்தம் 6-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 26 July 2018 12:10 AM GMT (Updated: 26 July 2018 12:10 AM GMT)

லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 6-வது நாளாக நீடித்தது. டெல்லியில் நாளை மத்திய அரசுடன் மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு சேவைகள் முடங்கி உள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள், டிரெய்லர் லாரிகள், கன்டெய்னர் லாரிகள் போன்றவை வழக்கம்போல் ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே அந்த லாரிகள் சங்கங்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்குமாறு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்துவருவதால், நாளொன்றுக்கு தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே ஒருசில இடங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்து உள்ளது. எனவே தமிழக அரசு வேலைநிறுத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போராட்டத்தை தீவிரப்படுத்த நாளை (இன்று) அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் பிற்பகல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே பொதுமக்களின் நலன் கருதி மத்திய அரசு நாளை (வெள்ளிக்கிழமை) அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுதொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

பேச்சுவார்த்தை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்ப்பதாக சம்மேளன நிர்வாகி ஒருவர் கூறினார். 

Next Story