‘சுண்ணாம்பை பாதுகாப்பாக விற்பனை செய்ய விரைவில் தனி சட்டம்’ வெங்கையா நாயுடு பேச்சு


‘சுண்ணாம்பை பாதுகாப்பாக விற்பனை செய்ய விரைவில் தனி சட்டம்’ வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 29 July 2018 10:00 PM GMT (Updated: 29 July 2018 8:38 PM GMT)

‘பார்வை இழப்பை தடுக்க சுண்ணாம்பை பாதுகாப்பாக விற்பனை செய்ய விரைவில் தனி சட்டம்’ கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ‘கண் மேற்பரப்பு மற்றும் கார்னியா சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு நினைவு பரிசுகளையும், தேசிய அளவில் ரசாயன பொருட்களால் கண் பார்வை பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்களையும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். பின்னர் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

பார்வை இழப்பை ஒழிப்பதில் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் திகழ்வதுடன், சமுதாயத்தை மேம்படுத்துவதில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நன்கொடைகள், மானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாக சேவையாற்ற பயன்படுகிறது.

பார்வை இழப்பானது கேட்ராக்ட், குளுக்கோமா, சர்க்கரை நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது. கண் குறைபாடுகளை போக்க முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் பார்வை இழப்பை தடுக்க தொடர்ந்து சேவை செய்து வருகின்றன. இந்த சேவையை இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் இந்தியா முழுவதும் மருத்துவ முகாமை நடத்த வேண்டும்.

சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து கண் மருத்துவத்துக்கு அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய நடமாடும் வாகனத்தை டாக்டர் பத்ரிநாத் கண்டுப்பிடித்துள்ளார். இந்த சேவையை இந்தியாவின் பிற பகுதியிலும் பயன்படுத்த வேண்டும். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை அளிப்பது அவசியம். எனவே கண் தானம் அதிகளவில் செய்ய வேண்டும்.

அமிலம் உள்பட பல்வேறு வேதியியல் பொருட்களால் எதிர்பாராதவிதமாக நடைபெறும் விபத்துகளில் பார்வையை இழக்க நேரிடுகிறது. சுண்ணாம்பால் பள்ளி குழந்தைகளின் பார்வை பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே சுண்ணாம்பை நீண்ட நாட்கள் பாக்கெட்டுகளில் அடைப்பதை நெறிமுறைப்படுத்தவும், பாதுகாப்பான முறையில் விற்பனை செய்வதற்காக எம்.பி.க்கள், அரசியல் கட்சியின் தலைவர்களிடம் பேசி நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுத்து விரைவில் தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த கருத்தரங்கின் மூலம் நாடு முழுவதும் வெற்றிலைப்பாக்கு, புகையிலை உபயோகிப்பவர்கள் பயன்படுத்தும் ‘சுண்ணாம்பு பாக்கெட்’, கழிவறைகள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் கண் மேற்பரப்பு பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

பாதுகாப்பற்ற முறையில் சுண்ணாம்பு விற்பனை செய்யப்படுவதால் குழந்தைகளின் கண்பார்வை பறிபோகிறது என்பதால் சட்டப்பூர்வ எச்சரிக்கை அச்சடிக்கப்பட்ட பெட்டியில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும், தாராளமாக கடைகளில் அமிலம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி புகழ்பெற்ற கண் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை மனுவை அமைப்புச்செயலாளர் டாக்டர் கீதா அய்யர், துணை ஜனாதிபதியிடம் அளித்தார்.

முன்னதாக டாக்டர் பிரேமா பத்மநாபன் வரவேற்றார். கருத்தரங்கில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பாஸ்கர் ஸ்ரீநிவாசன் நன்றி கூறினார்.

Next Story