முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்காளதேச தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் எச்.ராஜா பேட்டி


முறையான ஆவணங்கள் இன்றி  தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்காளதேச தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 31 July 2018 10:15 PM GMT (Updated: 2018-08-01T02:49:02+05:30)

முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்காளதேச தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்தார்.

அடையாறு,

சென்னை மயிலாப்பூரில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி அசாமில் தேசிய குடிமகன் பதிவேடு கணக்கெடுப்பு பணி நடந்தது, இதில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக சில வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

தற்போது தமிழ்நாட்டிலும் கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற இடங்களில் வங்காளதேச நாட்டினர், பீகார், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு கூலி வேலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் வேலை பார்க்கும் வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் முறையான ஆவணங்கள் வைத்துள்ளனரா? என்பதை சரிபார்க்க வேண்டும். அப்படி முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இவர்களால் தமிழர்களின் வேலைவாய்ப்பு குறைகிறது.

சிலை கடத்தலை தடுக்க, ஓவ்வொரு கோவில்களிலும் ஒரு சிலை பாதுகாப்பு அறை கட்ட வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவை விரைந்து நிறைவேற்ற வேண்டும். சிலை கடத்தலுக்கு அறநிலையத்துறை அதிகாரிகளே துணை போவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு தான் அறநிலையத்துறையில் வேலை வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் இருப்பது ஏன்?. இது இந்து அறநிலையத்துறையா? அல்லது இந்து அறம் அழிக்கும் துறையா? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்களை கையகப்படுத்தாமல் இருக்கின்றனர்.

எனவே கோவில் சொத்துக்களை மீட்டு, தற்போதைய சந்தை மதிப்பில் குத்தகைக்கு விட வேண்டும் என்ற கோர்ட்டு தீர்ப்பை 30 நாட்களில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் கோவில்கள் முன்பு இந்துக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார். 

Next Story