கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 July 2018 10:35 PM GMT (Updated: 2018-08-01T04:05:17+05:30)

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் முடிவுகள் 2-ந் தேதி (நாளைக்கு) வெளியிடப்படுகின்றன.

சென்னை, 

தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என மூன்றடுக்கு முறையை அனுசரித்து 18 ஆயிரத்து775 கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

முதல் அடுக்கில் வரும் 18 ஆயிரத்து 465 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதற்கட்டத்தில் 12.3.2018 முதல் 07.5.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டின்மதுரை கிளையின் உத்தரவின்படி அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், ஐகோர்ட்டின் இடைக்கால தடையை விலக்கி உத்தரவிடப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் ஆகியவை தவிர மற்ற அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதனடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தி முடித்தது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐகோர்ட்டுக்கு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு திரும்ப அனுப்பியது. நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று ஐகோர்ட்டு நேற்று ஆணையிட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே, புகார்கள் அல்லது சட்ட ஒழுங்கு மற்றும் வேறு காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தாலோ, ரத்து செய்யப்பட்டு இருந்தாலோ, தள்ளி வைக்கப்பட்டிருந்தாலோ, பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தாலோ, அந்த சங்கங்கள் தவிர மற்ற அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்க அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நாளை (2-ந்தேதி) 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படும். 3 மற்றும் 4-ம் நிலுவையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் 6-ந்தேதி அன்று நடத்தப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, தள்ளி வைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் நடவடிக்கைகள், நிறுத்தப்பட்ட நிலையிலிருந்து தொடர ஆணையிடப்பட்டுள்ள சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு ஓட்டு எண்ணிக்கையோ, தேர்தல் முடிவை அறிவிக்கவோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story