ஷெனாய் நகர், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெண் ஊழியர்களிடம் ஒப்படைப்பு

ஷெனாய் நகர், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு முழுமையாக பெண் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் சென்டிரல்- விமானநிலையம், விமானநிலையம்- ஏ.ஜி-டி.எம்.எஸ்., ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. விரைவான மற்றும் பாதுகாப்பான சேவையால் நாளுக்கு நாள் மெட்ரோ ரெயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுத்து வருகிறது.
குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஒரு சில ரெயில் நிலையங்களை கையாளும் பொறுப்பை முழுமையாக பெண்களிடமே ஒப்படைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதனால் முதல் கட்டமாக 2 ரெயில் நிலையங்களை நிர்வகிக்கும் முழு பொறுப்பும் பெண் ஊழியர்களிடம் ஒப்படைத்து உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் 26 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூலமாக தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கையாளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சுத்தம், நேரம் தவறாமை, பாதுகாப்பு, விரைவான சேவை உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையங்களில் பெண் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக பெண் ஊழியர்களும், மெட்ரோ ரெயில்களில் பெண்களுக்கு என்று தனியாக பெண்கள் பயணிக்கும் பெட்டி போன்றவையும் அமைத்து தந்துள்ளது.
இதுதவிர ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பயணத்தின் போது ஆபத்தான சூழ்நிலையில் ரெயிலை இயக்குபவர்களிடம் பேசவும் வழிவகை செய்து தரப்பட்டு உள்ளது.
பெண் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ஷெனாய் நகர் மற்றும் கோயம்பேடு ஆகிய 2 ரெயில் நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு முழுமையாக பெண் ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்கள் நிர்வாகம், டிக்கெட் வழங்குவது, நிலைய பாதுகாப்பு மற்றும் நிலைய பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பெண் பயணிகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும். ஒரு ஷிப்டுக்கு 15 பெண் ஊழியர்கள் வீதம் 2 ஷிப்டுகளுக்கு 30 பேர் பணி நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பெண்களுக்கு தேவையான உதவிகளை இந்த ஊழியர்கள் செய்து தருவார்கள். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பெண் ஊழியர்கள் கையாளும் ரெயில் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story