காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை வழக்கில் 100 கிலோ தங்கம் முறைகேடு: அதிர்ச்சி தகவல்கள்


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை வழக்கில் 100 கிலோ தங்கம் முறைகேடு: அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 1 Aug 2018 11:45 PM GMT (Updated: 1 Aug 2018 8:06 PM GMT)

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை வழக்கில் 100 கிலோ தங்கம் முறைகேடு மூலம் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை வழக்கில் 100 கிலோ தங்கம் முறைகேடு மூலம் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் ஒருவரும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி சிலையும் கடந்த 2015-ம் ஆண்டு புதிதாக செய்யப்பட்டது.

இந்த சிலைகள் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த சிலைகள் செய்வதற்கு பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 8.75 கிலோ தங்கம் முறைகேடு மூலம் சுருட்டப்பட்டது என்றும், மேற்கண்ட 2 சிலைகளிலும் சிறிதளவு கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 6 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். நேற்று முன்தினம் இந்த வழக்கில், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்(திருப்பணிகள்) கவிதா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளின் முறைகேடு லீலைகள் அதிர்ச்சி தகவல்களாக வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 1600 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை மூன்று உள்ளது. ஒரு மூலவர் சிலைக்கு ஒரு உற்சவர் சிலைதான் இருக்க வேண்டும் என்பது ஆகமவிதியாகும். ஆனால் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை 3 உள்ளது. 100 ஆண்டுகள் தொன்மையான சிலை ஒன்று உள்ளது. 2009-ம் ஆண்டு காஞ்சி மடத்தால் 2-வதாக ஒரு சோமாஸ்கந்தர் சிலை செய்து கொடுக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு 3-வதாக தற்போது பிரச்சினைக்குரிய சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தர் சிலையுடன், ஏலவார்குழலி சிலையும் ஒரே பீடத்தில் இருப்பவை ஆகும். அந்தவகையில் 3 சோமாஸ்கந்தர் சிலைகளுடன், 3 ஏலவார்குழலி சிலைகளும் உள்ளன.

தங்கத்தை மோசடி செய்யும் நோக்கிலேயே ஏற்கனவே 2 சிலைகள் இருக்கும்பட்சத்தில் 3-வதாக ஒரு சிலை செய்ய முடிவு செய்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் சோமாஸ்கந்தர் சிலை சேதமடைந்து இருப்பதாக மிரட்டி அறிக்கை பெற்று, அதிகாரி கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் அறநிலையத்துறையின் அப்போதைய ஆணையரும் சேர்ந்து புதிய சிலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

முதலில் 50 கிலோ எடையுள்ள சோமாஸ்கந்தர் சிலைதான் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு மாறாக 111 கிலோ எடையில் சோமாஸ்கந்தர் சிலை செய்கிறார்கள். அதிக அளவு தங்கத்தை சுருட்டும் நோக்கத்தில் சிலையின் எடையை கூட்டி இருக்கிறார்கள். இதுபோல்தான் ஏலவார்குழலி அம்மன் சிலையிலும் எந்தவித சேதமும் இல்லாத நிலையில், அதையும் புதிதாக செய்துள்ளனர்.

இந்த சிலைகள் செய்வதற்கு எத்தனை கிலோ தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது என்பது பற்றி எந்தவித ஆவணமும் இல்லை. ஆனால் பொதுமக்களிடம் இருந்து 80 முதல் 100 கிலோ வரை தங்கத்தை நன்கொடையாக பெற்று, அவற்றை முழுவதுமாக சுருட்டி இருக்க வேண்டும்.

வழக்கில் 8.75 கிலோ தங்கம்தான் முறைகேடு மூலம் சுருட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளோம்.

இதுபற்றி தற்போது கைது செய்யப்பட்டுள்ள அதிகாரி கவிதாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த வழக்கு விசாரணை தொடங்கிய பிறகு கடந்த 7 மாதங்களாக அதிகாரி கவிதாவிடம் விசாரணை நடத்த முற்பட்டபோதும் அவர் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

அதிகாரி கவிதா, முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தான் எல்லாம், நான் அவர் அனுப்பிய பைல்களை கையெழுத்து போட்டு அனுப்பி விடுவேன், என்று கோர்ட்டில் கூறி உள்ளார்.

அவரை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த உள்ளோம். இந்த வழக்கில் முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் ஒருவரும் கைதாக வாய்ப்பு உள்ளது. தீவிர விசாரணைக்குப்பிறகு அது பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே தங்கச்சிலை மோசடி வழக்கில் கைதான கூடுதல் ஆணையர் கவிதா ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Next Story