காதலி வீட்டில் தகராறு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது


காதலி வீட்டில் தகராறு செய்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 8:25 PM GMT (Updated: 2018-08-02T01:55:03+05:30)

தாம்பரம் அருகே காதலி வீட்டில் தகராறு செய்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம், 

தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடன் வேலை செய்யும் திருவொற்றியூர் பட்டினத்தார் தெருவை சேர்ந்த பிரவீன்ராஜ் (25) என்பவரை 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதை கேள்விப்பட்ட அந்த பெண், அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரவீன்ராஜ் அடிக்கடி அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரவீன்ராஜ், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன்ராஜை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பிரவீன்ராஜ் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், பிரவீன்ராஜை தடுத்து பிடித்தார். அப்போது பிரவீன்ராஜ், சுந்தரம் வைத்திருந்த கைவிலங்கை பிடுங்கி அவரது தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பிரவீன்ராஜின் காதலி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story