ரூ.11 லட்சம் கையாடல்: தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


ரூ.11 லட்சம் கையாடல்: தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
x
தினத்தந்தி 1 Aug 2018 8:28 PM GMT (Updated: 2018-08-02T01:58:39+05:30)

தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த வி.ரவி, கே.ஹரிதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின், காஞ்சீபுரம் மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறோம். அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளோம். எங்களைபோல, காஞ்சீபுரம் மண்டலத்தில் சுமார் 4 ஆயிரத்து 200 போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.

இந்த தொழிற்சங்கத்துக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.300 பிடித்தம் செய்யப்பட்டது.

இவ்வாறு மொத்தம் ரூ.11 லட்சம் வசூலிக்கப்பட்டது. ஆனால், அலுவலகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொகையை, அண்ணா தொழிற்சங்கத்தின் காஞ்சீபுரம் மண்ட செயலாளர் ஆர்.சங்கரன் கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடமும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், ஜூலை 31-ந்தேதி ஆர்.சங்கரன் பணியில் இருந்து ஓய்வுப் பெற்று விட்டார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பதில் அளிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளர், விழுப்புரம் போக்குவரத்து மண்டல நிர்வாக இயக்குனர், (காஞ்சீபுரம்) பொதுமேலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story