திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - பினராயி விஜயன்


திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 2 Aug 2018 5:46 AM GMT (Updated: 2018-08-02T11:16:06+05:30)

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டறிந்தார்.

சென்னை,

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

29 ந்தேதி துணை  குடியரசுத்தலைவர், கவர்னர் பன்வாரி லால் புரோகித் ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும்  ஐசியூ பிரிவில்  சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அது குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டது.

29-ந்தேதி  இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் நிலையில் பின்னடைவு  ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.  இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானது.இந்த தகவல் கேட்டு மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து விட்டனர்.

இதை தொடர்ந்து உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு  காவேரி மருத்துவமனையில் 30 ந்தேதி 3 -வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். தலைவா எழுந்து வா என்றும், கலைஞர் வாழ்க என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

அன்று  காலை  காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வருகை தந்தார்.  அவருடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சிவி சண்முகம், காமராஜ்  ஆகியோர் உடன் வந்தனர். தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களும், பிரபலங்களும் வருகை தந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்

அன்று இரவு தி.மு.க செயல்தலைவர்  கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும்  இருந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்

31 ந்தேதி 4 -வது நாளாக  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  காவேரி மருத்துவமனைக்கு வந்து  ஐசியூ வார்டில் கருணாநிதியை  நேரில் பார்த்தார். இரண்டாவதாக அது குறித்து புகைப்படமும் வெளியிடப்பட்டது. அன்று இரவு நடிகர் ரஜினிகாந்த்  காவேரி மருத்துவமனை வந்து  கருணாநிதி உடல் நலம் குறித்து  விசாரித்தார்.

நேற்று ஆகஸ்ட் 1-ந்தேதி  5-வது நாளாக  கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக நடிகர் விஜய், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ,நடிகர் விவேக், நடிகர் கவுண்டமணி, டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் அஜித், விஜய் ஆண்டனி ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.  அவர்கள் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி, கருணாநிதியின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற்று வரவேண்டும் என  நடிகை ஓவியா கூறி உள்ளார்.

இன்று ஆகஸ்ட் 2 ந்தேதி 6-வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவேரி மருத்துவமனைக்கு இன்று காலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வருகை தந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வந்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். அவர் காவேரி மருத்துவமனை சென்று மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார்.

 பின்னர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிறவி போராளியான  திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். என கூறி உள்ளார்


Next Story