சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு


சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
x
தினத்தந்தி 2 Aug 2018 6:37 AM GMT (Updated: 2 Aug 2018 6:37 AM GMT)

சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிலவற்றில், சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த வழக்குகளை எல்லாம் விசாரணை நடத்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை ஒன்றை உருவாக்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில், சிலை கடத்தல் சம்பவத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பல முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பல சிலைகள் மீட்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சாமி சிலை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் சிறப்பு டிவிசன் பெஞ்சை உருவாக்கி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை காணாமல் போனது குறித்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இப்போதுள்ள வழக்குகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துவது என்று முடிவு எடுத்துள்ளது என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘தமிழக போலீசார் மீது தமிழக அரசுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். ‘நம்பிக்கை உள்ளது. சிலை கடத்தல் பிரிவு போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை. அவர்கள், எந்த தகவலையும் அரசுக்கு தெரிவிப்பது இல்லை. ஆனால், இந்த வழக்கை ஒரு சுதந்திரமான அமைப்பு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று தமிழக அரசு கருதுகிறது’ என்று அரவிந்த் பாண்டியன் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘தமிழக அரசின் கொள்கை முடிவை எதிர்த்து உடனடியாக நான் வழக்கு தொடர்வேன்’ என்றார்.

இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது குறித்த சில ஆவணங்களை நீதிபதியிடம் காட்டினார். அதை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு குறித்த ஆவணங்கள், உத்தரவு ஆகியவற்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை  சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Next Story