அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை


அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் வீடுகளில் அதிரடி சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2018 12:15 AM GMT (Updated: 2 Aug 2018 7:33 PM GMT)

தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். #AnnaUniversity

சென்னை, 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அதில் தேர்ச்சி பெற்ற 90 ஆயிரம் மாணவர்களிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்ச பணம் பெற்று மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதிகாரி உமா சென்னை கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் நடந்த சோதனையில், பணம், நகை போன்ற எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்குள்ளான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி பேராசிரியர் (கணக்கு) சிவக்குமார் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் திண்டிவனம் சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை இந்த சோதனை நீடித்தது. சோதனையின் போது 2 வீட்டு கதவுகளும் பூட்டப்பட்டு, அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மிகவும் ரகசியமாக நடந்தது.

சோதனையின்போது அவர்களிடம், திண்டிவனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து மறுமதிப்பீட்டுக்கு எத்தனை மாணவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் மாலையில் சோதனையை முடித்த போலீசார் விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

10 பேராசிரியர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

10 பேர் வீடுகளிலும் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா வீட்டில் ஒரு கூடுதல் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெயர் பட்டியலும் சிக்கி உள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது, முறைகேடு தொடர்பாக நிறைய தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலில் எழுதிய தேர்வில் ஒரு மாணவன் 7 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளான். அந்த மாணவனுக்கு மறுமதிப்பீட்டின் போது 70 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. 10 மடங்கு அதிகமாக மதிப்பெண் போடப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு தான் இது. இதுபோல் நிறைய மாணவர்களுக்கு முறைகேடாக மதிப்பெண்கள் போட்டிருக்கிறார் கள். அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story