கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 2 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-03T01:26:27+05:30)

கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்-2 திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், பிரமிட் சாய்மீரா என்ற நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரூ.100 கோடி செலவில் தயாரிக்க கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் நிறுவனத்துடன் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தர சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்கு முன்பணமாக ரூ.4 கோடி கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அந்த பணத்தை கொண்டு மர்மயோகி படத்தை எடுக்கும் வேலைகள் எதையும் செய்யாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தார்.

இதுதொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தநிலையில், கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம்-2’ என்ற படத்தை தயாரித்து வருகிற 10-ந் தேதி வெளியிடப்போவதாக தகவல் வெளியாக உள்ளது.

எனவே, மர்மயோகி படத்துக்காக எங்களிடம் வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story