நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்துக்கு எதிராக ‘கருணாநிதி தொடர்ந்த வழக்கை நிலுவையில் வைக்க முடியாது’ ஐகோர்ட்டு கருத்து


நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்துக்கு எதிராக ‘கருணாநிதி தொடர்ந்த வழக்கை நிலுவையில் வைக்க முடியாது’ ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 2 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-03T01:56:34+05:30)

நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்துக்கு எதிராக ‘கருணாநிதி தொடர்ந்த வழக்கை நிலுவையில் வைக்க முடியாது’ ஐகோர்ட்டு கருத்து

சென்னை

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, இதுகுறித்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அந்த ஆணையம் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோன்று ஆணையம் அமைத்ததை எதிர்த்தும் தனியாக வழக்கு போட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜராகி, “மனுதாரர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் உள்ளார். அவரிடம் கருத்து கேட்டுதான் இந்த வழக்கை வாதிட முடியும் என்பதால் விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

“கருணாநிதி குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். அதேசமயம் இந்த வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க முடியாது. எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும். இருதரப்பினரும் வாதிட வேண்டும்” என்று நீதிபதி கூறினார்.


Next Story